2017-18-ம் ஆண்டுக்கான
கல்விக் கடன் வட்டி மானியத்தை பெற செப்.28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கல்விக் கடன் வழங்கி வருகின்றன.
குறிப்பாக பொறியியல், மருத்துவம், வணிக மேலாண்மை போன்ற தொழில்சார்ந்த படிப்புகளுக்கு கல்வி கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதில், இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) மாதிரி கல்விக் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெறுபவர்களுக்கு வட்டி மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு மானியம் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத் துக்கு கீழ் இருக்க வேண்டும். தொழில், தொழில்நுட்ப படிப்பு களில் பயில்பவராக இருக்க வேண்டும்.
கல்விக் கடன் பெறும்போதே வருமானச் சான்றிதழை தாசில் தாரிடம் பெற்று வங்கியிடம் அளித்திருக்க வேண்டும். இச்சான்றிதழை வைத்தே வட்டி மானியத்தை மத்திய அரசிடம் வங்கிகள் கேட்டுப்பெற முடியும்.
இந்நிலையில், 2017-18-ம் கல்வியாண்டுக்கான வட்டியை திரும்பப் பெற செப்டம்பர் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.
இந்த காலத்துக்குள் வங்கிகள் மானியம் பெற விண்ணப்பிக்க தவறினால், அது மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும்.
இது தொடர்பாக, ‘எஜூகேஷன் லோன் டாஸ்க் ஃபோர்ஸ்’ (இஎல்டிஎஃப்) அமைப்பின் அமைப் பாளர் சீனிவாசன் கூறியதாவது: மாணவர்களின் படிப்பு காலம் மற்றும் படிப்பு முடித்தவுடன் கூடுதலாக ஒரு ஆண்டுக்கான வட்டியை மானியமாக பெறலாம்.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கல்விக்கடன் கொடுத்த வங்கிகள் தகுதியுள்ள மாணவர்களுக்கான வட்டி மானியத்தை பெற குறிப்பிட்ட காலத்துக்குள் தொடர்பு வங்கியான கனரா வங்கி வழியாக மத்திய மனித வள அமைச்சகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
சில நேரங்களில் வங்கி மேலாளர்கள் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால், கடன் வாங்கிய மாணவர்கள் மீது வட்டி சுமை சென்று சேருகிறது.
இந்நிலையில், கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான வட்டி மானியத்தை கனரா வங்கியின் இணையதளத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை விண்ணப்பித்து வங்கிகள், திரும்பப்பெறலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.
எனவே, கல்விக் கடன் பெற்ற மாணவர், தங்கள் வங்கி மேலாளரி டம் அது பற்றி நினைவூட்டல் கடிதத்தை அளிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்க தவறும் அதிகாரிகள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் வழிவகை உள்ளது.
இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் info@eltf.in என்கிற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...