தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த
மாநில அளவிலான கலையருவி போட்டிகளின் பரிசளிப்பு விழா நேற்று நாமக்கல்
மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி வளாகத்தில்
நடந்தது.
விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் இசை, நாடகம் மற்றும் நடன போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய பாடங்கள்
பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு
அடுத்த மாதம் இறுதிக்குள் மடிக்கணினி மற்றும் சைக்கிள் வழங்கப்படும்.
இன்றைக்கு பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை மனதில்
கொண்டு அரசு புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது.
அடுத்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு திறமை
பயிற்சி (ஸ்கில் டிரெய்னிங்) எனப்படும் புதிதாக 12 பாடங்கள் இணைக்கப்படும்.
அப்படி இணைக்கப்படும் போது பிளஸ்-2 முடித்தாலே அனைவருக்கும் வேலைவாய்ப்பு
உத்தரவாதத்தை தரும் கல்வியாக அது இருக்கும். அடுத்த ஆண்டு வரும் நீட்
தேர்வை சந்திப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நீட்
தேர்விற்காக 3 ஆயிரத்து 200 ஆசிரியர்களை தேர்வு செய்து உள்ளோம். காணொலி
காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
யோகா
ஜி.எஸ்.டி எனப்படும் புதிய திட்டம் மத்திய
அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்காக பல்வேறு தரப்பினர் கணக்கு
காட்டியாக வேண்டும். இந்தியாவில் 2 லட்சத்து 85 ஆயிரம் பட்டயக்கணக்காளர்கள்
என்கிற தணிக்கையாளர்கள் உள்ளனர். அதை மனதில் கொண்டு தமிழக அரசு பள்ளி
மாணவர்கள் 25 ஆயிரம் பேரை தேர்வு செய்து சி.ஏ. பயிற்சி அளிக்க ஏற்பாடு
செய்து வருகிறது.
அடுத்த வாரம் இறுதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வாரம் ஒருநாள் நடக்கும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
ஸ்மார்ட் வகுப்பறைகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம்
பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பில் 20 கணினி
மயமாக்கப்பட்ட (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்) வகுப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த வகுப்பறைகள் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் கலந்து கொண்டு கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய சீருடை
1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள
மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு புதிய சீருடை வழங்கப்பட உள்ளது. அது தனியார்
பள்ளிச்சீருடைகளை மிஞ்சும் அளவில் சிறப்பாக இருக்கும்.
காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களில் அந்தந்த பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்
தற்காலிகமாக பகுதி நேர ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு
ரூ.7 ஆயிரத்து 500-ஐ சம்பளமாக வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு
உள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் ஆன்-லைன் மூலம் 1
லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அப்போது அவர்களின் மதிப்பெண்களை
சரி செய்யும்போது சில இடங்களில் தவறு நடந்து உள்ளது என்பதை குறிப்பிட்டு,
அதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் 192 பேர் மீது
தவறு இருக்கிறது என்பதை தெரிந்து 8 பேர் மீது கடுமையான நடவடிக்கையை அரசு
எடுத்து உள்ளது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...