கல்வித்துறை வெளியிட்ட மாதிரி வினாத்தாளிற்கும், நேற்று நடந்த காலாண்டு பிளஸ் 1 ஆங்கில தேர்வு வினாத்தாளிற்கும் வேறுபாடு உள்ளதாக மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
இந்தாண்டு முதல் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1க்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பாடத்திட்டம்புதிது என்பதால் காலாண்டு தேர்வு நெருங்கும் நிலையிலும் அதற்கான வினாத்தாள் எப்படியிருக்கும் என ஆசிரியர், மாணவர் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.
இதையடுத்து ஆக.,24ல் பிளஸ் 1 பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. ஆங்கிலம் ஒரே தாளாக மாற்றப்பட்டு மொத்தம் 90 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் இடம் பெற்றன. இதில் ஒரு மதிப்பெண் பகுதியில் 14, இரண்டு மதிப்பெண் பகுதியில்7, நான்கு மதிப்பெண் பகுதியில் 4, ஆறு மதிப்பெண் பகுதியில் 2, எட்டு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள்உட்பட மொத்தம் 44 வினாக்கள் இடம் பெற்றன.ஆனால் நேற்று நடந்த காலாண்டு தேர்வில் இடம் பெற்ற வினாக்களில் பல மாற்றங்கள் இருந்தன. குறிப்பாக ஒரு மதிப்பெண் பகுதியில் 20 வினாக்கள் கேட்கப்பட்டன. துணைப்பாடம் பகுதியில் இருந்தும் வினா இடம் பெற்றது.
எட்டு மதிப்பெண் பகுதியில் இடம் பெறவேண்டிய துணைப்பாடம், 5 மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டது.இதுபோல் 6 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட்ட 28 - 30 மற்றும் 31 - 33 (செய்யுள் பகுதி) வினாக்கள் பாடத் திட்டத்தில் இடம் பெறவில்லை. மாதிரி வினாத்தாளிலும் இல்லை. 'தவறை கண்டுபிடித்து எழுது' என புதிதாக 6 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட்டுள்ளது.மாதிரி வினாத்தாளில் இடம் பெற்ற 'செய்யுள் பாட்டை கொடுத்து நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும்' பகுதி காலாண்டு தேர்வில் இடம் பெறவில்லை. இதுபோல் பல மாற்றங்கள் இருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்து ஆங்கில ஆசிரியர் ரமேஷ் கூறியதாவது:மாதிரி வினாத்தாள் அடிப்படையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. ஆனால் காலாண்டு வினாத்தாளில் கேட்கப்பட்ட வினா வடிவங்களில் பல மாற்றங்கள் இருந்தன.
மாதிரியில் 44 வினாக்கள் இடம் பெற்றது. ஆனால் இத்தேர்வில் 48 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மாற்றத்தால் மாணவர்கள் குழப்பமானதுடன், மனஅழுத்தமும் அடைந்துள்ளனர் என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...