பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முழுத் தகவல்களை சேகரித்து 'எமிஸ்' எனும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பற்றிய முழுத் தகவல்களை அறிய, 'எமிஸ்', (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) எனும் திட்டம் சிலஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஆசிரியர், மாணவர் விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டது.பள்ளி திறக்கப்பட்ட நாள், மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை, வகுப்பறைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர் பெயர், வயது, பிறந்த தேதி, தந்தையின் பெயர், பள்ளியில் சேர்ந்த ஆண்டு விவரங்களை சேகரித்து பதிவு செய்ய அறிவுறுத்தியது. அதே போல், ஆசிரியர்களின் பெயர், பணியில் சேர்ந்த ஆண்டு, முகவரியை பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் இதுவரை மாணவர்களின் விவரங்களை மட்டுமே பள்ளிகள் பதிவு செய்துள்ளன. சில பள்ளிகளே ஒரு சில ஆசிரியர்களின் விவரங்களை மட்டும் பதிந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்களையும் உடனே புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் பயன்பாட்டாளர் பெயர், கடவுச்சொல் வழங்கப்படும். அதை பயன்படுத்தி அந்தந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்யவும், தேவைப்படும்போது மாணவர், ஆசிரியர் குறித்த விபரங்களை உடனே பெறவும் முடியும்.ஒவ்வொரு பள்ளி வாரியாக தொகுக்கப்படும் விவரங்கள் வட்டார அளவில், மாவட்ட அளவில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக முதன்மை கல்வி அலுவலகத்தில் சிறப்பு மையம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இதனை எளிமைப்படுத்த விரைவில் அலைபேசி செயலியையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...