தனது நிலையே கேள்விக்குறியாக இருந்த நிலையில்
பிரதிபலன் பாராமல் தனது சிகிச்சைக்காக வைத்திருந்த நிதியை கேரள வெள்ள நிவாரணத்துக்கு அளித்த சிறுமியின் இதய அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து தர பிரபல மருத்துவமனை முன்வந்த நெகிழ்ச்சி சம்பவம் கரூரில் நடந்துள்ளது.கரூர் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி (36). இவரது கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்து ஒன்றில்சிக்கி உயிரிழந்தார். கணவரின் மறைவுக்குப் பின் தனது ஒரே ஆதரவு என்று தனது மகள் அக்ஷயாவை (6) பாசத்துடன் வளர்த்து வருகிறார் ஜோதிமணி.
வருடங்கள் ஓட அக்ஷயா அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கலானார். அப்போது அவர்களை இடிபோன்ற ஒரு செய்தி தாக்கியது. உடல்நலக் குறைவால் அடிக்கடி பாதிக்கப்பட்ட அக்ஷயாவை சோதித்த மருத்துவர்கள் அவருக்குஇதயத்தில் கோளாறு உள்ளதை தெரிவித்து அவருக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யவேண்டும், அதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும் என்று கூறினர்.கணவனின் மறைவுக்குப் பின் தனக்கு இருக்கும்ஒரே ஆதரவு மகள் அக்ஷயா. தற்போது அவரும் இதயநோயால் அறுவை சிகிச்சை செய்தால் பிழைப்பாள்என்ற நிலை. சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும். அவ்வளவு பணத்திற்கு எங்கே போவேன், என் மகள் இறக்க வேண்டியதுதானா? என்று ஜோதிமணி கதறி அழுதார்.அவருக்கு அப்போது ஒரு ஆதரவுக் கரம் நீண்டது.
அக்ஷயாவின் சிகிச்சைக்கு தேவைப்படும் நிதி குறித்து வலைதளங்களில் சாதிக், சலீம் பதிவிட முதற்கட்ட சிகிச்சைக்குத் தேவைப்பட்ட ரூ.3 லட்சம் கிடைத்தது. அதில் சில மாதங்களுக்கு முன் அக்ஷயாவுக்கு ஆயிரம் விளக்கில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.இரண்டாம் கட்ட சிகிச்சை வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இதற்கு ரூ.2.5 லட்சம் தேவை என்ற நிலையில் சமூக வலைதளங்களில் நல்லஉள்ளங்களின் உதவியை எதிர்ப்பார்த்து மீண்டும் ஜோதிமணியும் அவர் மகள் அக்ஷயாவும் காத்திருக்கின்றனர். இதுவரை ரூ. 20 ஆயிரம் வரையில் உதவி கிடைத்துள்ளது.
இந்நிலையில் கேரளாவின் பெருவெள்ளம் மக்கள் வீடு உடைமைகளை இழந்து படும் துயரம், முதல்வரின் வேண்டுகோள் அக்ஷயாவின் மனதையும் அசைத்துப் பார்த்தது. தானும் கேரளா மக்களுக்கு உதவ வேண்டும் என்று அறுவைசிகிச்சைக்கு காத்திருக்கும் அந்தச் சிறுமியின் இதயத்தில் தோன்றியது.தனது அறுவை சிகிச்சைக்காக நல்ல உள்ளங்கள் அளித்த ரூ. 20 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரத்தை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தார். “என்னைப் போன்ற சிறுவர்கள் வெள்ளத்தில் சிரமப்படுகின்றனர். அதனால்தான், என்னுடைய பணத்தில் ஒரு பகுதியை கேரளாவுக்குக் கொடுக்க முடிவு செய்தேன். கண்டிப்பாக, எனக்கு ஒருவர் உதவி செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இப்போது கேரளாவுக்குத்தான் உடனடியாக உதவி தேவைப்படுகிறது” என்று அப்போது அக்ஷயா கூறியுள்ளார்.தனது இதய அறுவை சிகிச்சைக்கு இரண்டு மாதத்துக்குள் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் தேவை என்ற நிலையில் சிகிச்சைப் பணத்தில் நிவாரணத்துக்கு நிதி அளித்த சிறுமியின் தயாள குணம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.இதைப் பார்த்த திருவனந்தபுரத்தில் உள்ள திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சிறுமி அக்ஷயாவுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்வதாக அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர், மருத்துவர் ஆஷா கிஷோர், ''அக்ஷயா செய்த செயல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது, அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.பிரதிபலன் பாரா உதவி அதைவிட பெரிய பலனைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பது அக்ஷயாவின் வாழ்க்கையில் நிரூபணமாகியுள்ளது. அவருக்கு நவம்பர் மாதம்எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இதய அறுவை சிகிச்சை நடந்து நலம் பெற வலைதளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...