விரிசல் விழுந்த சுவர், துர்நாற்றம் வீசும் கழிப்பறை, உடைந்த பெஞ்ச், புதர்கள் நிறைந்த வளாகம்... இவ்வாறு தான் அரசு பள்ளி இருக்கும் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கி உள்ளது, திருப்பூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளி. அதன் உட்கட்டமைப்பு வசதி, மாணவர்களை சுண்டி இழுக்கிறது.திருப்பூர், அனுப்பர்பாளையம், நேதாஜி வீதி, கவிதா லட்சுமி நகரில், மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது
கடந்த, 2003ல் துவக்கப்பட்ட இப்பள்ளி, மாநகராட்சியின் வாரச்சந்தை, இறைச்சி கடை அருகே, 4 சென்ட் இடத்தில், 8க்கு, 12 அடி கட்டடத்தில் இயங்கி வந்தது.ஒரேயொரு வகுப்பறையில் தான், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடந்தது. அப்பகுதி மக்கள், இந்த பள்ளியில், தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை
இதனால், 22 மாணவர்களுடன் பள்ளி இயங்கியது
4 சென்ட் நிலம்
இந்நிலையில், 2008ல், பள்ளியின் தலைமை ஆசிரியையாக கற்பகம் பொறுப்பேற்றார். பள்ளியின் நிலையை பார்த்த அவர், மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பது, உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது என உறுதியேற்றார்.இதற்காக, வீடு வீடாகச் சென்றும், அங்குள்ள வர்த்தகர்களை சந்தித்தும், பள்ளி கட்டடம் கட்ட நிதி திரட்டினார்
அனைவருக்கும் கல்வி திட்டம் வாயிலாக, எட்டு லட்சம் ரூபாய் நிதி பெற்று, கூடுதலாக, 4 சென்ட் இடம் வாங்கி, பள்ளியை விரிவுபடுத்தினார்.தொடர்ந்து, நான்கு வகுப்பறைகள், சமையல் அறை கட்டப்பட்டன
பள்ளியின் தரத்தை உயர்த்துவதை லட்சியமாக கொண்ட கற்பகம், அடுத்த கட்டமாக, பள்ளியை வண்ணமயமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். சொந்த பணம், 50 ஆயிரம் ரூபாயுடன், பொதுமக்களிடம் திரட்டியது என, மொத்தம், 1.75 லட்சம் ரூபாயில், பணியை துவக்கினார்
முப்பரிமாண ஓவியம்
பள்ளி சுற்றுச் சுவரில், விலங்குகள், உள்பக்கம், தலைவர்கள், மலர்கள், விளையாட்டு என அனைத்து ஓவியங்களும் வரையப்பட்டன. இவற்றில், பல ஓவியங்கள் முப்பரிமாண முறையில் வரையப்பட்டன. இந்த முயற்சிக்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது
பெஞ்ச், டெஸ்க், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், வகுப்பறை முழுவதும் ஸ்பீக்கர் என, ஒரு முன்னோடி பள்ளியாக, இப்பள்ளி மாறி விட்டது.மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எடுக்கப்பட்ட முயற்சிக்கு, வெற்றி கிடைத்துள்ளது
மெல்ல மெல்ல பள்ளி மேம்பாடு அடைவதை பார்த்த பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்
இதனால், மாணவர்கள் எண்ணிக்கை உயர ஆரம்பித்து, இப்போது, 160 பேர் படிக்கின்றனர்
இவர்களில், பெரும்பாலானோர் பனியன், பாத்திர தொழிலாளர்களின் குழந்தைகள்
ஏசி' வசதியும் வருகிறது
தலைமை ஆசிரியை கற்பகம் கூறியதாவது
நான் பணியில் சேர்ந்த போது, தினமும் மது பாட்டில்களை அகற்றிய பின்பே, பள்ளிக்குள் நுழைய வேண்டியிருந்தது. எப்படியாவது, பள்ளியை மாற்றிக் காட்ட வேண்டும் என உறுதி எடுத்தேன்
புத்தகத்தில் படிப்பதை, சுவரில் நேரில் காண முடிவதால், மாணவர்கள் மனதில் எளிதாக பதிய வைத்து கொள்கின்றனர். இப்பகுதி மக்கள், தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு அனுப்பாமல், இங்கே சேர்த்துள்ளனர்
இதுவே மிகப்பெரிய வெற்றி. அடுத்ததாக, வகுப்பறைகளில், 'ஏசி' மற்றும் மைதானம் வசதி ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்
Hats off to you Karpagam mam
ReplyDeletegood work madam
ReplyDelete