இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை 20 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐடிசி) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘2018ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 3.35 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்ட விற்பனையைக் காட்டிலும் 20 விழுக்காடு உயர்வாகும். இதில் சீனாவைச் சேர்ந்த க்ஷியோமி நிறுவனம் 1 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது.
க்ஷியோமி நிறுவனத்தின் சந்தைப் பங்கு 29.7 விழுக்காடாக உள்ளது. இரண்டாவது இடத்தில் 23.8 விழுக்காடு சந்தைப் பங்குடன் சாம்சங் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் 80 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. 42 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து 12.6 விழுக்காடு சந்தைப் பங்குடன் விவோ மூன்றாவது இடத்தில் உள்ளது. ஓப்போ நிறுவனம் 7.6 விழுக்காடு சந்தைப் பங்கையும், டிரேன்ஸன் நிறுவனம் 5 விழுக்காடு சந்தைப் பங்கையும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.’
இதுகுறித்து ஐடிசி இந்தியா நிறுவனத்தின் துணை ஆராய்ச்சி இயக்குநர் நவ்கேந்தர் சிங், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ஆன்லைன் விற்பனைத் தளங்களின் பிரத்யேக விற்பனை அறிவிப்புகளும், நேரடி விற்பனைக் கடைகளின் வலுவான ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்புக்குக் காரணமாக உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா உருவெடுக்கும். இன்னும் சில மாதங்களில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலம் தொடங்கவுள்ளதால் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலும் ஸ்மார்ட்போன் விற்பனை வலுவாக அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...