ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முத்தமிழ் இலக்கியப் பேரவையின் 4ஆம் ஆண்டு நற்றமிழ் விழாவில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு முத்தமிழ் விருதை வழங்குகிறார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன். உடன்
மத்திய அரசின் கீழ் விண்வெளித் துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றாலும், அறிவியல் துறையில் சேவையைத் தொடர்வேன் என விஞ்ஞானியும், விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பில் 4-ஆம் ஆண்டு நற்றமிழ் விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.19) நடைபெற்றது. இந்த விழாவில், அறிவியல் துறையில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக முத்தமிழ் விருதை தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வழங்க, மயில்சாமி அண்ணாதுரை பெற்றுக் கொண்டார்.
விழாவில், மயில்சாமி அண்ணாதுரை ஆற்றிய ஏற்புரை: இது எனது 75-ஆவது ஏற்புரை. அறிவியலில் பல துறைகள் உள்ளன. என்னுடையது விண்வெளித் துறை. எதிர்பார்த்து நடக்கும் என நினைத்தால், நடக்காது. எதிர்பார்க்காத நிலையில் நடக்கும். இது வாழ்க்கைப் பாடம். எனது 60 வயதுக்குப் பிறகு பணி நீட்டிப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். அது நடக்க
வில்லை.
எனக்கு கொடுத்த பணி நிலவுக்குப் போக வேண்டும், செவ்வாய்க்குப் போக வேண்டும். அதை சிறப்பாகச் செய்தேன். இது தாய்மொழிக் கல்வியின் பயன் என்பேன். எனது கிராமத்தில் உள்ள மாட்டுக் கொட்டகை, கோயில் திண்ணை, மரத்தடி எனது மூன்று வகுப்புகள். இவைதான் என் அடித்
தளத்தை உருவாக்கின.
சிறு வயதில் எனது தந்தையுடன் இலக்கிய நிகழ்வுகளுக்குப் போவேன். அங்கு தமிழ் பாடல்கள் பாடுவார்கள். அப்போது என்னுள் ஒரு கேள்வி எழுந்தது.
முத்தமிழான இயல், இசை, நாடகம் என்பது சரியா எனக் கேட்டேன். நான்காவது ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என நினைத்தேன். அது அறிவியல் தமிழாக இருந்தது.
4 ஆண்டுகளுக்கு ஒரு செயற்கைக்கோள் என்றிருந்த நிலையில், மாதம் ஒரு செயற்கைக்கோளை உருவாக்குவோம் எனத் திட்டமிட்டு, கடந்த 40 மாதங்களில் 36 செயற்கைக்கோள்களை உருவாக்கினோம். தமிழால் முடியும், தமிழ் படித்தால் முடியும் என்பதைச் செய்து காட்டினோம். உலக அளவில் செயற்கைக்கோள் தயாரிப்பில் இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது. முதல், இரண்டாவது இடங்களுக்கு வரத் தயாராக இருக்கிறோம்.
பள்ளியில் படிக்கும்போது வரலாற்றுப் பாடத்தைப் படிக்க வேண்டுமா என எண்ணியபோது, வரலாறு படைக்க வேண்டும் என்றால், வரலாற்றுப் பாடத்தைப் படிக்க வேண்டும் என எனது தந்தை வழிகாட்டினார்.
இன்று இங்கு நான் சாதனையாளர் விருது பெறுவதற்கு காரணம், எனது 7 வயதில் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பரிசு பெற்றபோது எனது தந்தை, அடுத்தது என்ன எனக் கேட்ட வினாவே காரணமாகும்.
நாம், நிலவுக்குச் சென்று நீர் இருக்கிறது என்பதை உறுதி செய்து, சாதனை படைத்தோம். வல்லரசு நாடுகள், நிலவுக்குச் சென்றபோது, அவர்கள் செல்லாத பகுதிகளுக்கு நாம் சென்று பல ஆய்வுகளைச் செய்து நீர் இருப்பதை சந்திராயன் மூலம் உறுதி செய்தோம்.
செவ்வாய்க்கு செயற்கைக்கோள்: அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் செவ்வாய்க்கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பின. இதுவரை 51 முறை செயற்கைக்கோள் அனுப்பிய நிலையில், 30 முறைதான் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது 40 சதவீதம்தான் வெற்றி பெற்றனர். அமெரிக்கா 5-ஆவது முயற்சியிலும், ரஷியா 9-ஆவது முயற்சியிலும் வென்றார்கள். ஜப்பான், சீன போன்ற நாடுகள் இன்னும் வெற்றி பெறவில்லை.
இந்திய அரசு செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பத் திட்டமிட்ட போது, குறைந்த அளவு பணம், குறைந்த கால அளவு வழங்கியது.
17 மாதங்களில் இந்தியாவில் உருவான மங்கள்யான் செயற்கைக்கோளை முதன்முதலாக அனுப்பினோம். சரியான நேரம், இடம், வேகம், திசை எனக் கணக்கிட்டு, செவ்வாய்க்கு செயற்கைக்கோளை முதன்முறையாக அனுப்பி வெற்றி பெற்றோம். தற்போது செவ்வாயில் மழை பெய்கிறதா என்ற ஆராய்ச்சி நடைபெறுகிறது.
இந்தியா முன்னேறுவதை உலக நாடுகள் கவனிக்கின்றன. நம்மால் காற்று இல்லாமல் எவ்வாறு 10 நிமிடம் இருக்க முடியாதோ, அதேபோல் செயற்கைக்கோள்கள் இல்லாமல் இந்தியா செயல்பட முடியாது.
மத்திய அரசில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள நிலை இருந்தாலும், நான் இன்னும் 36 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னால் செயல்பட முடியும். எனது வெற்றிக்கு முக்கிய காரணம் எனது தமிழ், எனது தமிழ் நாடு, எனது தாய் நாடு என்றார் மயில்சாமி அண்ணாதுரை.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் வே.சந்திரசேகரன், செயலாளர் சீனி திருமால் முருகன், பொருளாளர் க.அருள் மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...