நியூயார்க்: நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து இன்று இரவு நாசா அறிவிக்க வாய்ப்புள்ளது. நிலாவில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
நிலாவில் தண்ணீர் இருப்பதாக 9 வருடத்திற்கு முன் சந்திராயன் கண்டுபிடித்தது. அதை அமெரிக்காவின் நாசாவும் பின் ஒப்புக்கொண்டது. ஆனால், அதன்பின் நிலாவில் பெரிதாக எந்த வானிலை ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. எல்லோரின் கவனமும் செவ்வாய் கிரகத்தை நோக்கி திரும்பியது.
இந்த நிலையில்தான் தற்போது நிலாவில் ஐஸ் கட்டி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நிலவில் மொத்தமாக குடியேறும் எண்ணத்தை அமெரிக்காவிற்கு அளித்துள்ளது.
எவ்வளவு தண்ணீர் இருக்கும்
நிலவில் தண்ணீர் என்றால், பட்டுக்கோட்டையின் கடைமடைக்கு வந்த சிறிதளவு காவிரி நீர் அளவிற்கு அல்ல, நிலாவில் கடல் கணக்கில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தண்ணீர் எல்லாம் மைனஸ் 156 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காரணமாக உறைந்துள்ளது. இந்த ஐஸ் கட்டி மட்டும் பல பில்லியன் டன் கணக்கில் இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.
ரெடி
இவ்வளவு தண்ணீர் சுத்தமாக கிடைக்கும் போது மனிதர்களுக்கு அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஐடியாவா கொடுக்க வேண்டும். ஆம், அமெரிக்கா இன்னும் சில வருடங்களில், நிலாவில் குடியேற மனிதர்களை அனுப்ப வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் நிறைய பேர் குடியேற வசதியாக நிலாவில் சில மாற்றங்களை செய்ய நாசா முடிவெடுத்துள்ளது .
எப்படி செய்ய போகிறார்கள்
நிலவின் வெப்பநிலையை கொஞ்சம் உயர்த்துவதன் மூலம் இந்த ஐஸ் கட்டிகளை உருக வைக்கலாம் என்று நாசா நினைக்கிறது. அப்படி செய்வதன் மூலம், நிலாவில் கடல் உருவாகும், கடல் உருவானால் கூடவே ஆக்சிஜன் உருவாகும், பின் பூமியில் இருப்பதை போல வளிமண்டலம் உருவாகும். இதுதான் நாசாவின் எதிர்கால (ரொம்ம்ம்ம்ப எதிர்காலம்) திட்டம்.
எப்படி பயன்படுத்த போகிறார்கள்
ஆனால், இப்போது இது சாத்தியம் இல்லை என்பதால், நிலாவை நாசா பஸ் ஸ்டாப்பாக, சாரி ராக்கெட் ஸ்டாப்பாக பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, நீண்ட தூர விண்வெளி பயணத்தின் போது, நிலாவில் ராக்கெட்டை இறக்கி ஓய்வு எடுக்கலாம், அங்கு வேறு விதமான ஆராய்ச்சி கூடங்களை அமைக்கலாம் என்று கூறுகிறது. இது அங்கு இடம் பிடிக்கும் சண்டையை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.
அறிவிப்பு
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதுகுறித்து இன்று இரவு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஆம், அமெரிக்காவின் துணை அதிபரும், விண்வெளி துறையின் கண்காணிப்பாளருமான மைக் பென்ஸ் இன்று நாசாவின் தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளார். அப்போது அவர் ஆற்றும் உரையில் இதுகுறித்து கண்டிப்பாக அறிவிப்பு வெளியாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
என்ன திட்டம்
முதல் திட்டமாக, நிலவிற்கு மிக அருகில் ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்க இருக்கிறார்கள். பூமிக்கு அருகில் சர்வதேச விண்வெளி நிலையம் இருப்பது போல, நிலவிற்கு அருகில் அமெரிக்க தங்களுக்கு என்று விண்வெளி நிலையம் அமைக்க வாய்ப்புள்ளது. இதை வைத்து நிலவிற்கு தினம் ஒருமுறை, வாரம் ஒருமுறை என்று, பைனல் இயர் ஸ்டூடண்ட் கல்லூரி செல்வது போல சென்று வரலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். அதை பற்றித்தான் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் நிலவிற்கு செல்ல
இதனால், நிலவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் ஆபரேஷனை கையில் எடுத்துள்ளது நாசா. ஆனால் இந்த முறை வெறும் கொடி நாட்ட மட்டுமல்ல, அடிக்கல் நாட்டவும்தான். இதற்காக மிக வேகமாக திட்டம் ஒன்றில் நாசா களமிறங்க வாய்ப்புள்ளது. மூன்றாவது உலகப்போர் தண்ணீருக்காக வரும் என்று கூறப்படுகிறது, ஒருவேளை நிலவில் இருக்கும் தண்ணீருக்காக கூட இருக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...