ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து நீண்ட நாட்களாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் ஆதார் ஆணையத்தின் முன்னாள் பொதுமேலாளருமான ஆர்.எஸ் ஷர்மா, சமீபத்தில், தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு, இந்த விவரத்தை வைத்துக் கொண்டு, எனக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள் என பகிரங்கமாக சவால் விடுத்தார்.
இந்த சவாலுக்கு பதிலடியாக, பிரான்ஸை சேர்ந்த எல்லியட் ஆல்டர்சன் என்ற பாதுகாப்பு நிபுணர், ஷர்மாவின் பிறந்த தேதி, இடம், தற்போதைய முகவரி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை ட்விட்டரில் வெளியிட்டார்.
மேலும், மற்றொறுவர் ஷர்மாவின் விவரத்தை வைத்து அவரது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தியிருப்பதாக தெரிவித்தார். பலரும் அவரது ஆதார் விவரங்களை வைத்து ஷாப்பிங் இணையதள கணக்குகளை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த ஆதார் முகமை, டிராய் தலைவர் ஷர்மாவின் தகவல்கள் ஆதார் எண் மூலம் திருடப்படவில்லை என உறுதிபட தெரிவித்தது. மேலும், அவர் பல ஆண்டுகளாக அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார் எனவே, ஒரு அரசு ஊழியரின் அடிப்படை தகவல்களை கூகுள் போன்ற சாதாரண இணையங்களில் இருந்தே பெற முடியும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
ஆனாலும், டிராய் தலைவர் ஷர்மாவின் சவாலை அவ்வளவு எளிதில் விட்டுவிடாமல் பலரும் அவரது எண்ணை பயன்படுத்தி பல்வேறு இணையதள கணக்குகளை தொடங்க முயற்சிக்கவே அவரது செல்போன் எண்ணுக்கு ஒன் டைம் பாஸ் வேர்ட்(OTP) எனும் உறுதிபடுத்தும் செய்திகள் மலைபோல் குவிய தொடங்கியுள்ளது.
இதை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள சர்மா, தொடர்ந்து எனக்கு வரும் தவறான ஒன் டைம் பாஸ் வேர்ட்(OTP) செய்திகளால் எனது செல்போன் பேட்டரி வடிகிறது. ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு நான் தயார், ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் தெரியப்படுத்தவும் என தெரிவித்திருந்தார்.
எனினும், ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிர்ந்து மக்களின் ஆதார் விவரங்களுக்கு பாதுகாப்ப்பு இல்லை என்பது போல் உணரச்செய்த ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் வலியுறுத்தியது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என இடதுசாரி தலைவர் டி.ராஜா கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் உள்பட பொதுவெளியில் தங்களது ஆதார் எண்ணை பகிர்வதில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்க வேண்டும் என ஆதார் முகமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.
அடுத்தவர்களின் ஆதார் தகவல்களை பயன்படுத்துவது சட்ட விரோதமாகும், அத்தகைய நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்க வேண்டும், வங்கி கணக்குகள், பாஸ்போர்ட் எண் மற்றும் பான் கார்டு எண் போன்று ஆதார் விவரங்கள் மிகவும் முக்கியமானதாகும் எனவே, இவற்றை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதில் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும் என ஆதார் முகமையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...