மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி பிரிவு
படிப்புகளுக்கு இந்தாண்டிற்கான யு.ஜி.சி., அங்கீகாரம் கிடைக்காததால் பல்கலை நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
இப்பல்கலை தொலைநிலை கல்வியில் 35க்கும் மேற்பட்ட இளங்கலை, 53க்கும் மேற்பட்ட முதுகலை படிப்புகள் உள்ளன. 70க்கும் மேற்பட்ட சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் உள்ளன. ஐம்பதாயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் இப்படிப்புகளுக்கு 2018 - 2019க்கான யு.ஜி.சி., அங்கீகாரத்தை பெற முடியாமல் பல்கலை நிர்வாகம் தத்தளிக்கிறது. கட்டணம் செலுத்தி படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
காரணம் என்ன
தொலைநிலைப் படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் யு.ஜி.சி., அங்கீகாரம் பெற வேண்டும். கடந்தாண்டு முதல் உயர்கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் யு.ஜி.சி., சில புதிய நிபந்தனைகளை விதித்தது. இதன்படி தேசிய தரமதிப்பீட்டு குழு (நாக்) ஆய்வில் சம்மந்தப்பட்ட பல்கலை 3.6க்கு மேல் தரமதிப்பீடு புள்ளி பெற்றிருந்தால் பாடப் பிரிவுகளுக்கான அங்கீகாரம் தொடர்ந்து நீடிப்பதில் தடை இல்லை எனவும் அதற்கு குறைவான புள்ளிகள் பெற்ற பல்கலைகளுக்கு இந்தாண்டு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவித்தது.
இதன்படி யு.ஜி.சி.,யின் டி.இ.பி., (டிஸ்டன்ஸ் எஜூகேஷன் பீரோ) என்ற அமைப்பு பல பல்கலைகளின் தொலைநிலைப் படிப்புக்களுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. இதில் மதுரை காமராஜ் பல்கலையும் ஒன்று. இப்பல்கலையில் துணைவேந்தர் இல்லாததால் 'நாக்' கமிட்டி புள்ளிகளை அதிகரிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதேநேரம் இதுபோல் பாதிக்கப்பட்ட சேலம் பெரியார், சிதம்பரம் அண்ணாமலை மற்றும் நெல்லை மனோன்மணியம் உள்ளிட்ட சில பல்கலைகள் யு.ஜி.சி.,யின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று விட்டன. ஆனால் மதுரை காமராஜ் பல்கலை சார்பில் தடை உத்தரவு பெறுவதற்கான மனு மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:இப்பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை பதவி ஏற்றது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. துணைவேந்தர் இல்லாததால் நிர்வாகச் செயல்பாட்டில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. 'ரூசா' திட்டத்தில் பல்கலை வளாகத்தை கணினிமயமாக்ககுவது உள்ளிட்ட பல கோடி ரூபாய் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டதுடன் கிடப்பில் போடப்பட்டன.
ஆராய்ச்சி பிரிவில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் தேங்கி கிடக்கின்றன. பல்கலை வளர்ச்சிக்கான கொள்கை ரீதியில் எடுக்க வேண்டிய முடிவுகள் முற்றிலும் முடங்கி விட்டன. இதன் விளைவு தான் தொலைநிலைப் படிப்புகளுக்கு இந்தாண்டு அங்கீகாரத்தை பெற முடியாமல் பல்கலை தத்தளிக்கிறது.
கண்டுகொள்ளாதகன்வீனர் கமிட்டி
துணைவேந்தர் இல்லாத சமயத்தில் செயல்பட வேண்டிய கன்வீனர் குழு (சி.சி.,) இதுவரை இரண்டு முறை மட்டுமே மதுரைக்கு வந்து ஆலோசனை நடத்தியுள்ளது. சி.சி., கமிட்டி செயல்பாடுகளும் ஆமை வேகத்தில் உள்ளதால் பல்கலை நிர்வாகம் ஒட்டுமொத்தமாக முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் சிறப்பு கவனம் செலுத்தி பணிகள் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.பல்கலை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "துணைவேந்தர் இல்லாத நேரத்தில் பணிகள் துரிதமாக நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. தொலைநிலைப் படிப்புகள் அங்கீகாரம் தொடர்பாக எவ்வித பாதிப்பும் இல்லை. நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...