கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், உலக நாடுகளிலிருந்தும் பலர் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் கே.கே ரோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சிவசண்முகநாதன், லலிதா தம்பதியின் மகள் அனுப்பிரியா (8). விழுப்புரம் தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள். சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த 4 ஆண்டுகளாக தனக்கு பெற்றோர் தினமும் வழங்கிய ரூ.5, ரூ.10 பணத்தை நான்கு உண்டியல்களில் அனுப்பிரியா சேர்த்து வைத்திருந்தார். இந்நிலையில் கேரளாவில் மக்கள் படும் துன்பத்தை பார்த்து உண்டியல்களை உடைத்து, தான் சேர்த்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை வங்கியில் டிடி மூலம் கேரளா அரசுக்கு அனுப்பி வைத்தார்.
சமூகவலைதளங்களில் இந்த தகவல் வெளியானது. இதை அறிந்த பிரபல தனியார் சைக்கிள் நிறுவன உரிமையாளர்கள் உடனடியாக தங்கள் நிறுவனத்தில் உள்ள சைக்கிளில் அச்சிறுமி விருப்பப்பட்ட சைக்கிளை இலவசமாக வழங்கவும், உண்டியலில் சேர்த்து வைத்திருந்த நிதியை வழங்கவும் முன்வந்தனர். அதன்படி அந்நிறுவனத்தினர், விழுப்புரத்தில் உள்ள சைக்கிள் கடைக்கு அச்சிறுமையை நேற்று அழைத்து அவர் விருப்பப்பட்ட சைக்கிளை வழங்கினார். மேலும் அந்த உண்டியல் பணத்தை வழங்கியபோது அதனை ஏற்க சிறுமி மறுத்துவிட்டாள். சைக்கிளை பெற்ற சிறுமி கூறுகையில், வரும் அக்டோபர் 16ல் எனது பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் உண்டியலை உடைத்து அந்த பணத்தில் சைக்கிள் வாங்கலாம் என நினைத்திருந்தேன். தற்போது அந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்துவிட்டேன். இதனிடையே தனியார் சைக்கிள் நிறுவனம் எனது ஆசையை பூர்த்தி செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றாள்.
நீசிறுமி அல்ல சின்ன கர்ணன்
ReplyDelete