நடப்பு
கல்வி ஆண்டில், தொலைநிலை கல்வியில், 38 படிப்புகளை நடத்துவதற்கு, பல்கலை
மானிய குழுவான, யு.ஜி.சி., அங்கீகாரம் அளித்துள்ளதாக, தமிழ்நாடு திறந்தநிலை
பல்கலை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக, பல்கலையின் துணை வேந்தர், எம்.பாஸ்கரன் நேற்று அளித்த பேட்டி:அடிப்படை பள்ளி கல்வியை முடிக்காதவர்கள், உயர் கல்வியை பெறாதவர்கள், இந்த பல்கலை வழியாக, உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு தரப்படுகிறது.இதற்கு, மத்திய அரசின், யு.ஜி.சி., சார்பில், உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த கல்வி ஆண்டில், யு.ஜி.சி., அனுமதியுடன், 83 படிப்புகள் நடத்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் என, 38 படிப்புகளுக்கு, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.இதற்கான கடிதம், 14ல், யு.ஜி.சி.,யிடம் இருந்து, பல்கலைக்கு கிடைத்துள்ளது.மேலும், மத்திய மனித வள அமைச்சக அனுமதியுடன், 'ஆன்லைனில்' சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரத்துடன், பி.எட்., என்ற, ஆசிரியர் கல்வியியல் படிப்பும் நடத்தப்படுகிறது.நடப்பு ஆண்டில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தில் அனுமதி கேட்டு, விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வியை நடத்தும் பல்கலைகளில், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை தான், அதிகளவிலான படிப்புகளுக்கு, யு.ஜி.சி.,யிடம் அங்கீகாரம் பெற்றுள்ளது.
பட்டம் மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை தவிர, 'டிப்ளமா' மற்றும் சான்றிதழ் படிப்புகளையும், தொழில்சார் படிப்புகளையும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை நடத்துகிறது. இதற்கான அங்கீகாரத்தை, உரிய அமைப்புகளிடம் இருந்து பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும், அனைத்து பல்கலைகளிலும், தொலைநிலை கல்வியில், ஒரே வகையான பாடத்திட்டம், அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, பொது பாடத்திட்ட தயாரிப்பு பணி, தமிழக அரசிடம் இருந்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையிடம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பல்கலையில், இதுவரை, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து, பட்டம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில், ஒரு லட்சம் பேர் படித்து வருகின்றனர்.எந்த பல்கலையில் வேண்டுமானாலும், மாணவர்கள் சேரலாம். ஆனால், அந்த பல்கலை நடத்தும் படிப்புக்கு, உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா என்பதை, ஆய்வு செய்வது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...