தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் இறுதி முதல் தற்போதுவரை தென்மேற்குப் பருவ மழை நாடு முழுவதும் பெய்து வருகிறது. தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இதனால் மழைப்பொழிவு அதிகமாக இருந்துவருகிறது. கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மழை அதிகமாகப் பெய்துவருவதால், தமிழகத்திலுள்ள அருவிகளில் அதிக நீர்வரத்து இருந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 3) சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“தென்மேற்குப் பருவ மழையின் முதல் இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை ஒட்டி மழை பதிவாகியுள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 112 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இயல்பான அளவானது 121 மி.மீ. என்ற அளவில் உள்ளது. மலைப்பகுதிகள் அடங்கிய கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில், இயல்பைவிட அதிகமாக 50 சதவீதத்திற்கும் மேல் மழை பதிவாகியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பொழிந்துள்ளது. மதுரையில் 6 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. தற்போது வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வெப்பச்சலனம் தொடரும் காரணத்தினாலும், அடுத்த 2 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறினார் பாலச்சந்திரன். “சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...