மாணவர்களின் அறிவுத்திறனை
மேம்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் அறிவியல் மையம், அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்க.பாண்டியராஜன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
சென்னை ரோட்டரி சங்கம் கேளக்ஸி சார்பில் 9 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான விநாடி-வினா போட்டி, சென்னை காமராஜர் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் பரிசுகள் வழங்கிப் பேசியது: மாணவர்களுக்கான அடிப்படைக் கல்வியை சிறந்த முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையிலும், நமது பண்டைய வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளும் வகையிலும் மாவட்டந்தோறும் அறிவியல் மையம், அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிப்பாடத்துடன் பொது அறிவு, வரலாற்றையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி, கைக்கடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்டவைபரிசாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், சென்னை ரோட்டரி சங்கம் கேளக்ஸியின் மாவட்ட ஆளுநர் பாபு பேரம், விஐடி கல்வி நிறுவனத்தின் கூடுதல் பதிவாளர் ஆர்.கே.மனோகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: நிகழ்ச்சியை அடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, பல்வேறு காரணங்களால் தொல்லியல் துறையில் 60 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றில் 500 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. தேனி,நாமக்கல் மாவட்டங்களில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது' என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...