கோவை, ''தமிழ்நாடு, உயர்கல்வித்துறையில்
முன்னணியில் இருப்பதற்கு தனியார் கல்லுாரிகளின் பங்களிப்பு முக்கிய காரணம். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக தனியார் கல்லுாரிகளின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக உள்ளன,'' என டில்லி தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலை பேராசிரியை மனிஷா பிரியம் பேசினார்.தமிழ்நாடு சுயநிதி, கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் சார்பில், பயன்பாடு சார்ந்த கல்விமுறை' என்ற தலைப்பில் மாநில பயிலரங்கு இரண்டு நாட்களாக கோவையில் நடந்தது. நிறைவு நாளான நேற்று ஹரியானா கல்வி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அகடமி இயக்குனர் மர்மர் முகோபாத்யாய், டில்லி உயர்கல்வித்துறை தலைவர் பேராசிரியர் சுதான்சு பூஷன், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் திருவேங்கடம் விளக்கம் அளித்தனர்.பேராசிரியை மனிஷா பிரியம் பேசியதாவது:பயன்பாடு சார்ந்த கல்விமுறை மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் கற்பித்தல் மையங்களாக அல்லாமல், மாணவர்களை மையமாக கொண்ட கற்போர் மையமாக செயல்படவேண்டும்.மாணவர்களின் திறன் ஆய்வு செய்யப்பட்டு நம் கற்றல் முறைகளில் தொடர் மாற்றங்கள், மேம்பாடுகளை கொண்டுவரவேண்டும்.உலகளாவிய அறிவை பெறவேண்டும் என்பது கல்வியின் நோக்கமல்ல; சமூக மேம்பாட்டிற்கு உதவும், பயனுள்ள நல்ல நோக்கங்களுக்கான கருவியாக கல்வியும், பாடத்திட்டமும் அமையவேண்டும்.இதன்மூலமே மாணவர்களின் தனித்திறன் மேம்படும். எதிர்கால பல்கலைகள் அறிவு என்பதை காட்டிலும், திறன் சார்ந்த அறிவு என்பதை தான் ஊக்குவிக்கும். தமிழ்நாடு, உயர்கல்வித்துறையில் முன்னணியில் இருப்பதற்கான காரணம் தனியார் கல்லுாரிகளின் பங்களிப்பு என்பதை இப்பயிலரங்குமூலம் உணரமுடிகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக தனியார் கல்லுாரிகளின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.மாநாட்டின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. தனியார் சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்க மாநில தலைவர் கலீல், செயலாளர் அஜீத்குமார் லால் மோகன், பொருளாளர் நித்யானந்தம், இணை செயலாளர் பரத்குமார் ஜெகமணி, நிர்வாக குழு உறுப்பினர் மிருணாளினி டேவிட் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...