''பொறியியல்
சேர்க்கைக்கு, பொது நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் நடந்து
வருகின்றன; எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரலாம்,'' என, அகில இந்திய
தொழில்நுட்ப கல்விக்குழு ஆலோசகர், திலீப் மால்ஹெடே தெரிவித்தார்.
கோவையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் சார்ந்த செயல்பாடுகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு, அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது.
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் கடந்து, தொழில்முனைவோராக உயர்த்த, ஹெக்கத்தான் போன்ற, பலவிதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு, 'ஸ்டார்ட் அப்' நிதிகளும் வழங்கப்படுகின்றன.
பொறியியல் கல்லுாரிகளில், மாணவர்களுக்கான, 'கிரெடிட்' புள்ளிகள், 190 என்பதிலிருந்து, 160 என்ற அளவில் குறைக்கப்பட்டதால், ஆசிரியர், மாணவர்களுக்கான எண்ணிக்கை விகிதமும் மாற்றப்பட்டது. தனியார் கல்லுாரிகளில், கூடுதலாக ஆசிரியர்கள் தேவை எனும்பட்சத்தில், அவர்கள் வைத்துக் கொள்வதற்கு தடையில்லை.
ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், பொறியியல் பிரிவின் கீழ், பாடத்திட்டங்களை தரம் உயர்த்தி, அறிமுகப்படுத்தியுள்ளோம். சில கல்வி நிறுவனங்கள், இப்பாடத்திட்டத்தை செயல்படுத்திஉள்ளன.இதை அடிப்படையாக வைத்து, மனப்பாடம் செய்யாமல், சிந்தித்து பதில் அளிக்கும் வகையில், தேர்வு முறைகளிலும் விரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, எஸ்.எஸ்.பி.சி.ஏ., எனப்படும் ஆராய்ச்சி திட்டத்தில், இந்தியாவில் இருந்து, 10 அணிகள், அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. இதில், முதல் மூன்று இடங்களை, அமெரிக்க மாணவர்களும், நான்காம் இடத்தை இந்திய மாணவர்களும் வென்றனர் என்பது பெருமைக்குரியது.
பொறியியல் சேர்க்கையின் கீழ், பல்வேறு நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தயார்படுத்திக் கொள்வதில், மனதளவில் மாணவர்கள் பல்வேறு அழுத்தங்களை சந்திப்பது மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் செலவிடும் நிலை உள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில், பொது நுழைவுத்தேர்வு நடத்த, ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இது சார்ந்த இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில், நடைமுறைப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...