என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு
இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இ.மெயில், செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை-2018 இணையதளத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு
மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு காலை 9, 10.30, பிற்பகல் 12, 2 மணி என 4 நிலைகளாக நடத்தப்பட உள்ளது. நாளை (சனிக்கிழமை) முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவுக்கு காலை 9, 10.30, பிற்பகல் 2 மணி என 3 நிலைகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு காலை 9, 10.30, பிற்பகல் 12, 2, 3 மணிக்கு நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு பிரிவு மாணவர் கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். இதில் மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொது கலந்தாய்வு
சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, மருத்துவ படிப்பு கலந்தாய்வு முடிந்ததும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 10-ந்தேதிக்கு பின்னர் பொது கலந்தாய்வு நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில், மதிப்பெண்ணுக்கு ஏற்ற வகையில் கல்லூரியை தேர்வு செய்வது எப்படி? என்பது குறித்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. அதை கலந்தாய்வுக்கு செல்ல இருக்கும் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...