தமிழக முன்னாள் முதல்வரான மறைந்த
காமராஜரின், பிறந்த தினமான இன்று, 'கல்வி வளர்ச்சி தினமாக'
கடைபிடிக்கப்படுகிறது. கல்விக்கு அவர் ஆற்றிய பணியை கவுரவிக்கும் விதமாக
இத்தினம் கொண்டாடப்படுகிறது. தொண்டு, துாய்மை, எளிமை, தியாகம்,
நாட்டுப்பற்று ஆகிய பண்புகளுக்கு மனிதவடிவம் கொடுத்தால், அது காமராஜராகத்
தான் இருக்கும்.
கல்வியே முதல் பணி
காமராஜர் 1903 ஜூலை 15ல் விருதுநகரில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டவர். 1930ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்யாகிரகத்தில் பங்கேற்று, சிறை சென்றார். 1936ல் காங்., கட்சியின் செயலரானார். 1940ல், சிறையிலிருக்கும் போதே, விருதுநகர் நகராட்சி தலைவராக தேர்வானார். 1946--52 வரை சென்னை மாகாண காங்., தலைவராக இருந்தார்.
முதல்வர்
கடந்த 1954 ஏப்., 13ல், முதன்முறையாக தமிழக முதல்வரனார். 1963 அக்., 2 வரை, ஒன்பது ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவரது ஆட்சியில், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஏழை, எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில், இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள், தமிழகத்தில் தொடங்கப்பட்டன.
பிரதமர் வாய்ப்பு
கட்சியின் மூத்த தலைவர்கள், பதவிகளை இளைஞர்களிடம் கொடுத்து விட்டு, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற இவரது கொள்கையை பிரதமர் நேரு, செயல்படுத்த விரும்பினார். அது 'கே- பிளான்' என்ற சிறப்பினைப் பெற்றது. இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றவராக விளங்கினார். இவரது வாழ்க்கையை எடுத்துரைக்கும் விதத்தில் 'காமராஜர்'என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் தலைவராக விளங்கினார்.
'பாரத ரத்னா' விருது
காந்தியடிகளின் அகிம்சை, சத்தியம்
ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு தியாக உணர்வுடன், தேசப்பணியில் ஈடுபட்ட
காமராஜர், 1975 அக்.2ல், காந்தி பிறந்த தினத்தில், மறைந்தார். மறைந்த போது,
இவரிடம் மிகச் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ
அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது சேவைகளை
பாராட்டி, மறைவுக்குபின் 1976ல், நாட்டின் மிக உயரிய 'பாரத ரத்னா' விருது
வழங்கப்பட்டது.
இவரே மக்கள் தலைவர்
காமராஜர் முதல்வராக இருந்த போது, ஒருமுறை மதுரைக்கு வந்தார். விருந்தினர் மாளிகையில் இரவு தங்க ஏற்பாடு செய்திருந்தனர். திடீரென மாளிகையில் மின்சாரம் இல்லை. ஊழியர்கள் சரி செய்து கொண்டிருந்தனர். அதைப்பற்றி கவலைப்படாத காமராஜர், "கட்டிலைத் துாக்கி மரத்தடியில் போடு' என்றார். அறையின் உள்ளே இருந்த கட்டிலை மரத்தடிக்கு கொண்டு வந்தனர். அங்கு வந்த காமராஜர், கட்டில் அருகே பாதுகாப்புக்கு நின்று போலீசை பார்த்து, "நீ ஏன் இங்கே நிற்கிறாய்? என்னை யாரும் துாக்கிக் கொண்டு போய்விடமாட்டார்கள்! நீயும் போய் படு'' என்றார். சில நொடிகளில் துாங்கி விட்டார். இந்த எளிமை உலக வரலாற்றில், எந்த மக்கள் தலைவருக்கும் இருந்ததில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...