புதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும்!
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கல்வித்துறையில் நீட் தேர்வால் நிலவிய சிக்கலான சூழ்நிலைகளைத் தொடர்ந்து… பாடத்திட்ட மாற்றம் வரை முடிவெடுக்கப்பட்டது. அது பிரம்மாண்டமாக மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கி அதே எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் பலரின் கூட்டு உழைப்பால் உருவாகியிருக்கிறது புதிய பாடநூல்கள். இந்த புதிய பாடத்திட்டம் மற்றும் அதற்கான ஆய்வு, ஆசிரியர்களுக்கு பயிற்சி பற்றியெல்லாம் நாம் கட்டாயம் பேச வேண்டும். பெற்றோர்களிடையே தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பற்றிய கனவுகள் பிரம்மாண்டமாக இருக்க, அதற்கு அரசிடம் அவர்களுக்கான எதிர்பார்ப்புகள் கூடுதலாக ஏற்பட அதையும் சமரசம் செய்யுமளவிற்கு பேசப்படும் ஒரு பெரும் செய்தியாகிவிட்டன பாடநூல்கள்..
சரி அப்படி என்னதான் இருக்கின்றது இந்த புதிய பாட நூலில்... வளர்ந்து வரும் தொழில்நுட்பமும், பல்வேறு போட்டித்தேர்வுகளுமே புதுப்புத்தகத்துக்கான வாசலை திறந்துள்ளன என்றால் மிகையாகாது எனலாம். பாடநூல்களில் சுலபமாக மாற்றத்தை கொண்டுவர முடியாது. பாடப்புத்தகங்களுக்கென்றே ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதை மீறாமல் உயிர்ப்புள்ள ஒரு பாடப்புத்தகத்தை உருவாக்குவது உண்மையில் ஒரு பெரிய சாதனை, அதை இப்பாடநூல்கள் மெய்ப்பிக்கின்றன. அதே சமயம் ஒரு சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது.
ஒவ்வொரு பாடத் தலைப்புகள் ஆரம்பத்திலும் QR Code , கணித மேதைகளின் குறிப்புகள் தந்து, கற்றல் விளைவுகளையும் வகுத்துள்ளனர். அதற்குப் பிறகே அறிமுகத்திற்கு செல்கின்றது. பெட்டிச் செய்திகளும் பட விளக்கங்களும், முன்னேற்றத்தைச் சோதித்தலுக்கான பகுதிகளும் தந்திருப்பதோடு குறிப்புகளுக்கான சிறு சிறு பெட்டிகளும்கூட தொடர்ந்து தந்துள்ளது பாராட்டத்தக்கது. கணக்குக் கலைச் சொற்களுக்கான பக்கங்கள் புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் தந்திருப்பது கூடுதல் சிறப்பு, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப இணையச் செயல்பாடு (ICT CORNER) என்ற புதிய முறையும் ஒவ்வொரு பாட இறுதியிலோ இடையிலோ தந்து தி பெஸ்ட் என்று சொல்லுமளவிற்கு தயாரித்திருப்பது கண்டு பேரானந்தம்.
பாடநூல் உருவாக்கக் குழுவின் பெயர்ப் பட்டியல் கூட இறுதிப் பக்கத்தில் தந்திருப்பதும் உள்ளபடியே மகிழ்ச்சி, ஆக எந்தவிதத்திலும் புத்தகம் மிக மிக அழகும் செறிவும் வாய்ந்ததாக இருப்பதை மறுக்கவோ மறுதலிக்கவோ இயலாது. அதோடு நில்லாமல் மேல்நிலை வகுப்பிற்கான 11 ஆம் வகுப்பு புத்தகங்கள் அவ்வளவும் செறிவு மிக்கவை. மிகச்சிறந்த வேள்விகளாக எண்ணி இப்பணிகளை செய்துள்ளது அறியலாம். பாடக் கருத்துகளின் ஆழம் மிக மிகத் தேவையான பகுதிகளே. தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) புத்தகங்களுக்கு இணையான தரமான புத்தகங்களை வழங்கியது மிக மிகப் பாராட்டத்தக்க செயல்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் சிந்தனைகளை மாணவருக்கு அளிக்கும் பெரும் விழிப்புணர்வை இப்புத்தகங்கள் தொடர்ந்து வழங்குவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறலாம். ஜூன் மாதம் முழுவதும் முடிந்து ஜூலை மாதமும் முடிவடையப்போகும் சூழலில் ஒவ்வொரு ஊரிலும் ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. இதில் புதிய புத்தகங்களை எவ்வாறு மாணவரிடத்தில் கொண்டு செல்வது என்பது பற்றியும் QR CODE பயன்பாடு எவ்விதம் எடுத்துச் செல்வது என்பது பற்றியும் விடாது இரு நாட்கள் பயிற்சி கொடுக்கப்படுகின்றன.
முதலில் உதயச் சந்திரன் பொதுவாகப் புதிய பாடநூலை மாணவரிடம் கொண்டுசெல்ல வேண்டிய தேவை, அதன் உருவாக்கம் பற்றிய நீண்ட உரையும் தொடர்ந்து குறிப்பிட்ட பாடங்களுக்குப் பிரத்யேகமாகப் பேசப்பட்டுள்ள உரை, அதோடு பாடநூல் தயாரிப்புக் குழுவில் பங்கேற்று மதிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்களது உரையும் காணொலியில் தந்து ஆசிரியர்களை ஆர்வமூட்டும் நிகழ்வு பயிற்சியில் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர்கள் விவாதித்து புத்தகத்தின் நிறை குறைகள் பேசப்பட்டு தாள்களில் எழுத்துப் பூர்வமாகப் பெறப்படும் முறைகளும் நிகழ்கின்றன. ஆங்காங்கே உயர் அதிகாரிகள் வந்து பார்வையிடுகின்றனர். எல்லாமும் மிகச் சரியாகப் போகின்றன.
ஒரு ஆசிரியராக இப்புத்தகங்கள் பற்றிய பார்வையைப் பல ஆசிரியர்களின் குரலாக உங்களுக்குத் தரவே கடமைப்பட்டுள்ளேன்... மதிப்பீட்டுப் பகுதி நமது மாணவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்கிறார் ஒரு 9 ஆம் வகுப்பின் ஆங்கில ஆசிரியர். பாடத்தின் பயிற்சிப் பகுதிகள் மிக அதிகமாக உள்ளது. அனைத்தையும் கொடுக்கப்பட்ட கால அளவில் முடிப்பதென்பது சவாலான விஷயமே என்ற கருத்தும் கூறப்படுகிறது. முக்கியமாக 6 மற்றும் 9 ஆம் வகுப்பில் ஒரு பருவத்தில் குழந்தைகளுக்கும் கொடுத்து கற்றல் விளைவுகளை அறுவடை செய்துவிட சூழல்கள் உள்ளனவா என்பது மிகப் பெரும் கேள்விக் குறி.
போட்டித் தேர்வை மனதில் கொண்டே முழுப் புத்தகமும் பார்த்து பார்த்து செதுக்கியிருப்பது மற்ற மாணவரை மனதில் வைக்க மறந்துவிட்டனரோ என எண்ண வைக்கிறது. எல்லோருடைய குரல்களிலும் ஒலிக்கும் ஏக்கம் நேரமின்மை. முப்பருவமாகப் பிரித்த பிறகு குழந்தைகள் குறுகிய காலத்தில் ஒரு மிக நீண்ட முழுப் புத்தகத்தைப் புரிந்து கற்றல் நிகழ்ந்து மாற்றம் பெறுவதில் சிக்கல், பக்கங்கள் மிக அதிகமாக உள்ளன. ஏனெனில், ஆசிரியர்களுக்கு கோப்புகள் தயாரிக்கும் பணி கூடுதல் சுமை எனவும், எல்லாக் குழந்தையையும் எளிதில் அத்தனையையும் கற்க அழைத்து வருவது வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் இயலாத ஒன்று.
மிக முக்கியமான ஒன்று, QR CODE இன் பகுதிகளை வகுப்பறையில் பயன்படுத்துவது எவ்வாறு? ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவார்கள், எல்லோருமா பயன்படுத்துவார்கள் என்றால் அது கேள்விக்குறியே. ஒரு வகுப்பின் 30 (அ) நாற்பது மாணவர்களுக்கும் எவ்வாறு இதைக் காட்டுவது? 45 நிமிடத்தில் பாடநூலின் சிலபஸ் என சொல்லப்படும் பாடப்பகுதியை முடிப்பார்களா? QR CODE பயன்படுத்துவார்களா? மாணவரின் பிரச்னைகளை அணுகி அவர்களைப் படிக்கத் தயாரிப்பு செய்வார்களா? ஏனெனில், சிறு அலைபேசியில் 2 மாணவரை வேண்டுமானால் ஒன்றாக அழைத்துக் காட்டலாம்.
வகுப்பு முழுவதிற்கும் அதைக் காட்டுதல் முழுவதும் இயலாதது. ஒவ்வொரு வகுப்பிலும் ஸ்மார்ட் கிளாஸ் என்று சொல்லப்படும் வசதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதைவிட 11 ஆம் வகுப்பில் புத்தகத்தின் அதிகப் பாடச் சுமையால் மாநிலம் முழுவதும் ஏராளமான பள்ளிகளில் மாணவர்கள் ஃபர்ஸ்ட் குரூப் என்று சொல்லப்படும் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவில் சேர அஞ்சி வெளியேறும் சூழல், ஒரு தலைமை ஆசிரியர் ஈரோடு மாவட்டத்தில் கூறும்போது ஒரு குறிப்பிட்ட பள்ளியில் அந்தப் பாடப் பிரிவு சேர்க்கை பூஜ்ஜியம், நன்றாக தேர்வு முடிவுகள் தந்து சிறப்பான பள்ளி எனப் பெயர் பெற்ற தனது பள்ளியில் கடந்த ஆண்டைவிட 11 ஆம் வகுப்பு சேர்க்கை ஏறத்தாழ பாதியாகக் குறைந்தும் கணினி வகுப்புப் பிரிவில் மிகக் குறைவான சேர்க்கை எனவும், இது ஆரோக்கியமற்ற சூழலை உண்டுபண்ணி இருக்கிறது எனவும் வருத்தப்படுகிறார். காரணம், உயிரியல் பிரிவு புத்தகங்களில் மட்டுமே 1000 பக்கங்கள் கொண்டுள்ளன, தம் பள்ளியில் ஜூன் மாதம் படித்து விட்டு இயற்பியல், வேதியியல் பாடச் சுமையைத் தாங்க முடியாமல் வேறு பிரிவிற்கு மாற்றம் பெற்றுச் சென்றுள்ள மாணவர்களைக் குறிப்பிட்டு வருத்தப்படுகிறார். வேலூர் மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தனது பள்ளியில் மேற்சொன்ன காரணத்தால் மாணவர் இல்லாததால் அந்தப் பாடத்திற்கு ஆசிரியர் தேவையற்றதாகி அந்தப் பணியிடம் நீக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என்கிறார்.
இது தமிழகத்தின் பல பள்ளிகளுக்கும் பொருந்தும். இவற்றை சரிகட்ட மாற்று வழி என்ன? என்ற சிந்தனையை உங்கள் முன்வைக்கிறேன். மீண்டும் மீண்டும் போட்டி மிகுந்த வாழ்க்கையை துரத்துவதாகவே குழந்தைகளின் கற்றல் வாழ்வு அமைய வேண்டுமா? யோசியுங்கள். மற்றுமொரு பெரிய சிக்கல் ஆங்கில வழியாக மாறிக்கொண்டிருக்கும் தமிழ்வழிப் பள்ளிகள், அங்கே தமிழ் வழியே கற்பித்துக் கொண்டுள்ள ஆசிரியர்களே ஆங்கில வழியில் கற்பிக்கப் பணிக்கப்படுகின்றனர். எந்தவித பயிற்சியும் இல்லாமல், ஆங்கிலத்தை தமிழ் வழியிலேயே கற்பிக்கும் சூழலில் ஆங்கில வழியில் உள்ள பாடநூல்கள் மற்றொரு சவால்.
பாடநூல்கள் தனியாகப் பேசக்கூடிய பொருள் அல்ல, அது பள்ளி சூழல், ஆசிரியர் நிலை, திறன்கள், குழந்தைகளின் திறன்கள், தலைமை ஆசிரியரின் கவனம், உயர் அலுவலர்களின் அணுகுமுறை, தேர்வு முறைகள், பெற்றோர் சமூகம் எல்லாமும் இணைந்த ஒரு சங்கிலிப் பிணைப்பு. ஆகவே, பள்ளிகளில் உண்மைநிலையில் தகுந்த சூழலும், ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தியும் திறம்பட மேற்பார்வை செய்யும் தலைமையும் நிறைந்த பள்ளிகளாக இருப்பதோடு மாணவரிடம் எடுத்துச் செல்லும் ஆசிரியர்களது மனப்பான்மையும்தான் உள்ளபடியே மாற்றங்களை விளைவித்து புத்தகத்தின் சிறப்புகளை வெற்றிப்பாதையில் பயணிக்க வைக்கும்.
- ஆசிரியை உமா
(அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர்)
(அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர்)
Super
ReplyDeleteமிக அருமையான அலசல்.
ReplyDeleteபாடத்திட்ட மாற்றத்தின் விளைவு மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றிய சிந்தனை துளியுமின்றி ,
மீத்திறன் பெற்ற மாணவர் களுக்கு மட்டும் கொடுக்க ப்பட்டதைப் போல் உள்ளது.
பெரும்பாலான அரசுப் பள்ளிகள் மட்டுமன்றி
தனியார் பள்ளிகளிலும் இதே நிலைமை தான்.
புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்ளலாம்.
இங்கே பூனையைப் பார்த்து புலி சூடு போட்டுக்கொண்டதைப் போல் உள்ளது இன்றைய நிலமை
உண்மை
ReplyDeleteபுதிய பாடத்திட்டம் புத்தி சாலிkalukkanathu. தமிழ்நாட்டு மாணவர்கlukku குழப்பம் தருkirathu
ReplyDeleteGreat job
ReplyDeleteIf they started from class one to three this time means it is very useful and also it will be useful to all.now it is a big jump for the higher secondary students
ReplyDeleteThanks for your sharing Padasalai and other websites...It's ground reality of Tamil Nadu schools
ReplyDelete