இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளராக உள்ள சாம்சங் நிறுவனம், இந்தியாவிலேயே உற்பத்தியை இருமடங்காக்க களமிறங்கியுள்ளதால், விலை மளமளவென சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட சாம்சங் நிறுவனம், அடுத்தடுத்து புதிய அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் களமிறக்கி, தனக்கான இடத்தை, தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகிறது. இதன்மூலம் கடந்த 2016-17 நிதியாண்டில் இந்திய செல்போன் சந்தையில், சாம்சங் போன்களின் விற்பனை 27 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதனாலேயே, தென்கொரியா, சீனா… ஏன் அமெரிக்காவில் கூட தனது மிகப்பெரிய உற்பத்தி மையத்தை நிறுவாத சாம்சங் நிறுவனம், இந்தியாவில் நிறுவியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் கடந்த 1990ஆம் ஆண்டு எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலையை நிறுவிய சாம்சங், அந்த ஆலையை டி.வி. தயாரிப்பு ஆலையாக 1997ஆம் ஆண்டில் உருமாற்றியது. இந்த நிறுவனத்தில் 2005ஆம் ஆண்டு முதல் செல்போன் உற்பத்தியும் நடைபெற்ற நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.4,915 கோடியில் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. சாம்சங் நிறுவனத்திற்கு நொய்டாவில் மட்டுமின்றி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரிலும் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலை உள்ளது.
நொய்டா ஆலையில் உற்பத்தியுடன் சேர்த்து, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஐந்தும், ஒரு வடிவமைப்பு மையமும் உள்ளன. அதில் மொத்தம் 70,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் ஸ்மார்ட்போன் உற்பத்தி மட்டுமே நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நொய்டாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில், செல்போன் உற்பத்தியை இருமடங்காக்கப் போவதாக சாம்சங் அறிவித்து, அதற்கான பணிகளையும் மின்னல் வேகத்தில் செய்து முடித்தது.
இந்த நிலையில், 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜேவும், பிரதமர் மோடியும் இணைந்து, சாம்சங் நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட ஆலையை தொடங்கி வைக்க இருக்கிறார்கள். நொய்டா ஆலையில் தற்போது ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆண்டுக்கு 67 லட்சமாக இருக்கும் நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையின் மூலம் ஸ்மார்ட்போன் உற்பத்தி 1.2 கோடியாக அதிகரிக்கும் என சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. இதனால், கூடுதலாக 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...