இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான,
'ஆன்லைன்' கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. முதல் சுற்றில் பங்கேற்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, விருப்ப பாடத்தை தேர்வு செய்ய, மூன்று நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
பல்வேறு தடைகளை தாண்டி, 1.76 லட்சம் இடங்களுக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. மொத்தம், ஐந்து சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.முதல் சுற்றில், 'கட் ஆப்' மதிப்பெண், 190 வரை பெற்றுள்ள, 10 ஆயிரம் மாணவர்களுக்கு, இன்று விருப்ப பாடப்பதிவு துவங்குகிறது. நள்ளிரவு, 12:01 மணி முதல், மாணவர் சேர்க்கைக்கான, https://www.tnea.ac.in என்ற இணையதளத்தில், விருப்ப பதிவு வசதி துவங்குகிறது.
நாளை மறுநாள், மாலை, 5:00 மணி வரை, விருப்ப பாடம் மற்றும் கல்லுாரியை, ஆன்லைனில் பதிவு செய்யலாம்.நாளை மறுநாள், மாலை, 5:00 மணிக்குள் பதிவை முடித்து, தங்களின் இணையதள பக்கத்தை, 'லாக்' செய்ய வேண்டும்.'லாக்' செய்யாமல் விட்டால், மாலை, 5:00 மணிக்கு பின், இணைய தளத்தில் தானாகவே விருப்ப பதிவு லாக்காகும். ஒரு முறை, லாக் செய்து விட்டால், மீண்டும் மாற்ற முடியாது. அதேபோல, ஒரு மாணவர், எத்தனை கல்லுாரி மற்றும் விருப்ப பாடத்தையும் பதிவு செய்யலாம்.ஆனால், காலியிடங்கள் அடிப்படையில், எந்த கல்லுாரி மற்றும் விருப்ப பாடம், மாணவர்களின் பட்டியலில் முதலில் உள்ளதோ, அந்த இடமே மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். எனவே, கல்லுாரிகளையும், பாடப்பிரிவையும் வரிசைப்படுத்தி பதிவதில் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் தங்களின், 'கட் ஆப்' மதிப் பெண் அடிப்படையில், கல்லுாரிகளையும், விருப்ப பாடத்தையும் தேர்வு செய்யலாம்.மூன்று ஆண்டுகளில், அண்ணாலை பல்கலை கவுன்சிலிங்கில், எந்த, 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு, எந்த கல்லுாரி, எந்த பாடப்பிரிவு கிடைத்தது என்ற விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் மாவட்ட வாரியாகவும், கல்லுாரி, பாடப்பிரிவு, கட் - ஆப் மதிப்பெண் என, எந்த ரீதியாகவும் பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.மாணவர்கள், தங்கள் வீட்டில் இருந்தபடி, பெற்றோர் ஆலோசனையுடன், நாளை மறுநாள் மாலைக்குள், விருப்ப பதிவை மேற்கொள்ளலாம்.
இணையதளம் மற்றும் கணினி வசதி இல்லாதவர்கள், நேரடியாக அண்ணா பல்கலையின் உதவி மையங்களுக்கு சென்றால், அங்கு எளிதாக ஆன்லைனில் விருப்ப பாடப்பதிவை மேற்கொள்ளலாம். இந்த மையங்களின் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
'பாஸ்வேர்டை' கொடுக்காதீர்! : விருப்ப பாடத்துக்கான, 'ஆன்லைன்' பதிவுக்கு, தனியார் கல்லுாரிகள் மற்றும் பயிற்சி மையங்களின் கணினிகள், பிரவுசிங் மையங்களின் கணினி களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, மாணவர் சேர்க்கை கமிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதேபோல, தங்களது, 'லாக் இன்' என்ற, பயன்பாட்டாளர் குறியீட்டு எண் மற்றும் ரகசிய, 'பாஸ்வேர்டு' எண்ணை, மாணவர்கள் வேறு நிறுவனங்களிடமோ, தெரியாத நபர்களிடமோ கொடுக்க வேண்டாம். அவ்வாறு கொடுத்தால், மாணவர்களின் விருப்ப பதிவில் அவர்கள், தங்கள் விருப்பத்துக்கான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை மாற்றம் செய்யும் அபாயம் உள்ளது என்றும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...