ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்துவது
அவசியமா?, தேர்வை கணினி வழியில் நடத்துவது சரியா? என்பதற்கு கல்வியாளர்,
தொழில்நுட்ப வல்லுனர், மாணவர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘நீட்’ தேர்வு
மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வில்
வெற்றி பெறுவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்த நாளில் இருந்தே
தமிழகம் அதை எதிர்த்து வருகிறது. ஆனாலும், 2 முறை ‘நீட்’ தேர்வு
நடத்தப்பட்டு, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வும் முடிக்கப்பட்டு
விட்டது. இந்த நிலையில், மத்திய அரசு ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு
நடத்தப்படும் என்றும், கணினி வழியில்தான் தேர்வை எழுத முடியும் என்றும்
அதிரடியாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு
எதிர்ப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு மேலும் அந்த
எதிர்ப்பை வலுவடைய செய்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது
அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். தி.மு.க. செயல் தலைவர்
மு.க.ஸ்டாலின், ‘நீட்’ தேர்வை கணினி வழி நடத்தினால் கிராமப்புற மாணவர்கள்
பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
பள்ளி கல்வித் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ‘நீட்’ தேர்வை நடத்த மத்திய
அரசிடம் வலியுறுத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பை கல்வியாளர்களும், மாணவர்களும் எவ்வாறு கருதுகிறார்கள்? என்பதை இனி பார்ப்போம்.
கல்வியாளர்
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியதாவது:-
போட்டித்தேர்வு என்பது மட்டும் மாணவர்களின்
திறமையை வெளிக்கொணருவது கிடையாது. வலுவான பாடத்திட்டம், நல்ல ஆசிரியர்கள்,
நூலகம் சென்று படித்தல், பாடத்திட்டத்துக்கு தொடர்புடைய கள ஆய்வு செய்தல்
என கல்வியை மேம்படுத்த வேண்டும். தற்போது ‘நீட்’ தேர்வில் தகுதி
பெற்றவர்களில், மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் ஓராண்டு பயிற்சி பெற்றவர்கள்
ஆவார்கள்.
தற்போது பிப்ரவரி மாதம் ஒரு தேர்வும்,
ஏப்ரல் மாதம் மற்றொரு தேர்வும் என ஆண்டுக்கு 2 தடவை ‘நீட்’ தேர்வு
நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி மாதம் பிளஸ்-2
மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படும். எனவே மாணவர்கள்
பொதுத்தேர்வுக்கு தங்களை தயார் படுத்துவார்களா? இல்லை, இந்த தேர்வுக்கு
தங்களை தயார் படுத்துவார்களா? என்ற கடினமான சூழ்நிலை உள்ளது. நிச்சயம் இது
மாணவர்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் மிகப்பெரிய மன உளைச்சலை
ஏற்படுத்தும்.
பயிற்சி கட்டணம் தவிர்த்து ‘நீட்’ தேர்வு
கட்டணம் ரூ.1,400 ஆகும். தற்போது 2 முறை தேர்வு நடத்தப்பட்டால் 2 தடவை
கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏழை-எளிய மாணவர்களுக்கு இது
மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும். அவர்களால் ஒரு தேர்வு மட்டுமே எழுத
முடியும். வசதி படைத்த மாணவர்கள் 2 தேர்வையும் எழுதுவார்கள். இதில் ஒரு
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் கூட அவர்களுக்கு மருத்துவக்கல்லூரி சீட்
கிடைத்துவிடும்.
ஏழை-எளிய மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக
காமராஜர் 6 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தார். ஆனால் தற்போது மத்திய
அரசு நீட் தேர்வால் ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து வருகிறது.
‘நீட்’ தேர்வு என்பது வியாபாரம் மட்டுமே. எனவே அதனை ரத்து செய்யவேண்டும்.
ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தி கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழில்நுட்ப வல்லுனர்
தொழில்நுட்ப வல்லுனர் கார்த்திக் கூறியதாவது:-
ஆன்லைனில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டால்
தேர்வு நேரம், அதன் முடிவு அறிவிக்கும் காலம் குறைய வாய்ப்பு இருக்கிறது.
ஆன்லைன் தேர்வுக்காக ஒரு சிஸ்டம் தொடங்கினால், ஒரு வருடம் அல்லது 3
வருடங்கள் வரை கடினமாக இருக்கும். தொடர்ந்து நடைபெறும் வரும் சூழலில்,
தேர்வு எளிதாகிவிடும். தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிப்பதற்கான வாய்ப்பு
இருக்கிறது. மேலும் சான்றிதழும் உடனடியாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதுபோன்று பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.
அதே சமயத்தில் தீமைகள் என்று சொன்னால் நிறைய
கேள்விகள் தேவைப்படும். எடுத்துக்காட்டாக 500 கேள்விகள் இருக்கிறது என்று
எடுத்துக்கொள்வோம். 5 பேர் தேர்வு எழுத செல்கிறார்கள் என்றால், அந்த 500
கேள்விகளை ரேண்டமாக அச்சிட்டு, விடைகளை இணைக்கும்போது, கேள்விகள் எளிதாக
தெரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் அதிகப்படியான கேள்விகள்
தேவைப்படும் நிலை இருக்கிறது. அதிகமானோர் தேர்வு எழுதுவதற்கான ‘சிஸ்டம்’,
அதற்கான இணையதள இணைப்பு உள்ளிட்டவை தேவைப்படும். ஒரே நேரத்தில் அதிகமானோர்
தேர்வு எழுதும்போது இணையதள ‘சர்வர்’ முடங்குவதற்கு வாய்ப்பும் இருக்கிறது.
மேலும் வினாத்தாள்களை இணையதளத்தில் இருந்து திருடுவதற்கு (ஹேக்) அதிக
வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்
ஏற்கனவே, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று
மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத நிலையில், மீண்டும் ‘நீட்’ தேர்வுக்கான
பயிற்சியை மேற்கொண்டு வரும் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த
மாணவர் கவுசிக் (வயது 19) இதுகுறித்து கூறியதாவது:-
ஆன்லைன் மூலம் ‘நீட்’ தேர்வு நடத்துவது
மாணவர்களுக்கு சாதகமான ஒன்றுதான். ஏனென்றால், ஆன்லைனில் தேர்வு
எழுதும்போது, ஒரு கேள்விக்கான பதிலை தவறாக ‘கிளிக்’ செய்துவிட்டாலும், உடனே
அதை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், பேப்பரில் தேர்வு எழுதும்போது
திருத்திக்கொள்ள முடியாது. அதேபோல், தேர்வு எழுதும் நாள், தேர்வு எழுதும்
மையம் ஆகியவற்றை மாணவர்களே தேர்வு செய்ய முடியும் என்பதும் நல்ல
விஷயம்தான். ஆனால், கேள்வித்தாள் தான் எவ்வாறு இருக்கப்போகிறது என்பது
தெரியவில்லை.
ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு என்பதும்
வரவேற்கக்கூடிய அம்சமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. காரணம், 2 முறை
தேர்வு நடத்தப்பட்டாலும், அதில் அதிகமாக பெற்ற மதிப்பெண்ணை மட்டும்
கணக்கில் எடுத்துக்கொள்வதால் அதுவும் மாணவர்களுக்கு சாதகமானதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி
சிதம்பரத்தை சேர்ந்த மாணவி பவிதா
கூறுகையில், தமிழக மாணவிகள் திறமையானவர்கள். அவர்களுக்கு தகுதித்தேர்வு
என்பது தேவையில்லாத ஒன்று. ஒரு நீட் தேர்வு எழுதுவதற்கே பல பிரச்சினைகளை
சந்தித்து வருகிறோம். பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதில் ஆண்டுக்கு 2
நீட் தேர்வு என்பது இப்போது படிக்கிற மாணவிகளுக்கு ஆறுதலாக இருந்தாலும் கூட
இதில் அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கே, முன்னுரிமை என்பது வருத்தம்
அளிக்கிறது.
இந்த முறையால் ஆண்டு முழுவதும் நீட்
தேர்வுக்காக படிக்க வேண்டிய நிலை ஏற்படும். அடுத்த மேல் படிப்பை எப்படி
படிப்பது. நீட் தேர்வே வேண்டாம் என்ற நிலையில், 2 தேர்வு தேவையில்லை. இது
மாணவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுத்தும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...