திருக்குறள்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்.
புண்கணீர் பூசல் தரும்.
விளக்கம்:
அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
பழமொழி
Blood is thicker than water.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
பொன்மொழி
உங்கள் ஒவ்வொருவரிலும் உலகத்தையே அசைக்கும் அளவுக்கு வலிமை உள்ளது.
- விவேகானந்தர்
இரண்டொழுக்க பண்பாடு
1.அனைவரிடமும் அன்பாக பழகுவேன்.
2.நான் பெரியோரை மதித்து நடப்பேன்.
பொதுஅறிவு
1.நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார் ?
சர் .சி .வி .ராமன்
2.தமிழ்நாட்டின் முதல் பெண் IPSஅதிகாரி யார்?
திலகவதி IPS
நீதிக்கதை
கதை 1
சொர்க்கமும் நரகமும்!
ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான்.
அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது.
ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான்.
முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.
எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்….
அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!
எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.
அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.
பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர்.
பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது.
அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை. ஆனால்,
அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா?
இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது.
கருமி கனவிலிருந்து மீண்டான். ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை
உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்.
கதை 2
இடம் மாறிப் பார்ப்போம்...
(இறையன்பு)
(இறையன்பு)
ரவிந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார். நாள் முழுவதும், அவன் வராததால் அவன் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது. ஒவ்வொரு முறையும் அவருக்கு கோபம் வந்தது. அடுத்த நாள் அவன் பணிக்கு வந்த போது "ஏன் இவ்வளவு தாமதம் " என்று கடுகடுத்த முகத்துடன் குரலை உயர்த்திக் கடிந்து கொண்டார். அப்போது மிகவும் வருத்தத்துடன் அந்தப் பணியாள் "என் மகள் நேற்று இறந்துவிட்டாள். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை " என்றார்.
தாகூர் தொடர்ந்து எழுதுகிறார். "நம்மைச் சுற்றியும் நம்மிடமும் பணிபுரிபவர்கள் எத்தனை சோகங்களைச் சுமந்து கொண்டு பணிபுரிகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது " என்று.
தன் உடல் உபாதைகளையும், இதயக் கசிவுகளையும் கண்களுக்குள்ளேயே காய்ந்து ஆவியாகிவிடும் கண்ணீரையும் சுமந்துகொண்டு எத்தனை பேர் பணிபுரிகிறார்களோ? எல்லோரும் நம்மைப் போலவே சௌகரியமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். நமக்கு ஒரு துன்பம் வந்துவிட்டால் அதை தாள முடியாமல் துவண்டு போகிறோம்.
எத்தனை பேர் தன் மகளுக்கு திருமணமாகாத சோகத்துடன் பணிபுரிகிறார்ளோ, எத்தனை பேர் கணவனை இழந்து வருத்தத்துடன் காரியமாற்றுகிறார்களோ, எத்தனை பேர் புத்தி சுவாதீனமின்மையால், உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இதயத்தில் சுமந்து வருகிறார்களோ, எத்தனை பேர் தனக்கே இருக்கும் இரத்தக் கொதிப்பையும், இதயநோயையும், கல்லீரல் பிரச்சனை யையும், நுரையீரல் தளர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் பணியாற்றுகிறார்களோ - யார் கண்டது.
ஒரு வேளை நாம் அவர்களிடத்தில் இருந்திருந்தால்... நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது. அப்படிப் பட்ட சோகங்கள் பாரம் தாங்காமல் நாம் அப்பளம் போல நொறுங்கி விடுவோம் அடுத்தவர்கள் இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தால் அவர்கள் எவ்வளவு மேன்மையானவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
நாம் செய்பவற்றையே சாதனை என்றும், நாம் மட்டும் தான் கடமையிலிருந்து வழுவாதவர்கள் என்றும் நம்மைப் பற்றி ஒரு மாயத் தோற்றத்தை நாமே உருவாக்கி வைத்திருக்கிறோம். அது எவ்வளவு போலியானது என்பதை நம்மிலும் சிறந்தவர்களை காணும் போதுதான் புலப்படும்.
கொஞ்சம் இடம் மாறிப் பார்ப்போம்.
இடம் மாறி யோசிப்போம்...
இடம் மாறி யோசிப்போம்...
இன்றைய செய்திகள்
21.07.2018
21.07.2018
*ஆகஸ்ட் 31 வரை பொறியியல் கலந்தாய்வு நடத்திக் கொள்ள தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
* மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் அறிவியல் மையம், அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
* தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
* பிரான்ஸ் சாட்வில்லே நகரில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
* ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் எடுத்த முதல் பாகிஸ்தான் வீரர் - ஃபகார் ஸமான். ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஸமான் 210 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...