தொழிற்கல்வியில்
புதிய பாடத்திட்ட புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,
மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.தமிழக பள்ளி
கல்வித்துறையில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம்
தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும், பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதில், பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும், புதிய பாட புத்தகங்கள் தாமதமாகவே வினியோகம் செய்யப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கான புத்தகங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தொழிற்கல்வியில், 14 பாடங்களுக்கான புத்தகங்களுக்கு, மாநிலம் முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
அதனால், தொழிற்கல்வி பாடப்பிரிவு வகுப்புகளில், பாடம் நடத்துவது பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தொழிற்கல்வி மாணவர்கள் கூறியதாவது:தொழிற்கல்வியில், பாடத்திட்டம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில், 14 பாடங்களுக்கு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த புத்தகங்கள், பெரும்பாலான பாடநுால் கழக விற்பனை மையங்களில் இருப்பு இல்லாததால், புத்தகங்களை எங்கே வாங்குவது என, தெரியவில்லை.
தொழிற்கல்வி பாட மாணவர்களுக்கு, குறைந்த எண்ணிக்கையில் தான் பாடங்கள் உள்ளன. அவற்றுக்கும், புத்தகங்கள் வழங்குவதை தாமதம் செய்வதால், வரும் பொது தேர்வுக்குள் முழுமையாக தயாராகி, அதிக மதிப்பெண் பெற முடியுமா என்ற, அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக பள்ளி கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, பாட புத்தகங்களை வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...