இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சந்திர கிரகணம் வெள்ளிக்கிழமை தோன்றுகிறது. இதனை வெறும் கண்களால் காணலாம் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள செய்தி:
இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. பின்னர் முழு கிரகணம் சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்குத் தொடங்கி அதிகாலை 2.43 மணிக்கு முடியும்.
தொடர்ந்து பகுதி சந்திரகிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடிவடையும். இந்த முழு சந்திர கிரகணம் மொத்தம் 102 நிமிஷங்கள் நிகழ உள்ளது. இது நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் ஆகும். இதனை வெறும் கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு விளையாது.
பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடு:
பொதுமக்களும், மாணவர்களும் சந்திர கிரகணத்தை நேரடியாகவும், தொலைநோக்கிகள் மூலமும் பார்த்துப் பயன்பெற பிர்லா கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 5 தொலைநோக்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நீண்ட முழு சந்திர கிரகணம் அடுத்ததாக 2029 ஜூலை 25-ஆம் தேதி நிகழும். அப்போதும் 102 நிமிஷங்கள் நீடித்திருக்கும்.
பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்:
அதுபோல, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் செவ்வாய் கோள் பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. இதன் காரணமாக ஜூலை 25 முதல் ஜூலை 31 -ஆம் தேதி வரை பூமியின் அருகே செவ்வாய் நெருங்கி வருகிறது. அப்போது, பூமிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தொலைவு 5.76 கோடி கிலோ மீட்டராக இருக்கும். நீள்வட்டப் பாதையில் சுற்றும் செவ்வாய் கோள் மிகுந்த தொலைவுக்குச் செல்லும்போது 38 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும். இந்த எதிரமைவு நிகழ்ச்சியை பொதுமக்கள் காணவும் பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சூரியனுக்கு நேர் எதிரே 180 டிகிரி கோணத்தில் ஒரு கோள் வரும்போது, அந்தக் கோள் எதிரமைவு கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அந்த எதிரமைவின்போது, அந்தக் கோளானது பூமிக்கு மிக அருகில் வருவதோடு, பெரிதாகவும், ஒளியுடனும் காணப்படும். மேலும், சூரியன் மறையும்போது உதயமாகி, இரவு முழுவதும் வானில் காணப்படும். இந்த நேரத்தில் அந்தக் கோள் குறித்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிகாரம் யாருக்கு தேவை:
ஆடி பவுர்ணமியான நாளை (ஜூலை 27) சந்திரகிரகணம் நிகழ்கிறது. இந்தியா முழுவதும் தெரியும் இது இந்த நுாற்றாண்டின் நீளமான கிரகணம்.நாளை இரவு 11:54 மணிக்கு துவங்கும் கிரகணம் இரவு 3:49 மணிக்கு (3 மணி 55 நிமிட நேரம்) முடிகிறது. இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் சந்திரனை பார்க்க கூடாது.
இரவு 8:00 மணிக்கு முன்பாக உண்பது நல்லது.வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள், கார்த்திகை, ரோகிணி, உத்திரம், அஸ்தம், பூராடம், உத்திராடம், திருவோணம்,அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி உள்ளவர்கள் கிரகணம் முடிந்த பின் கடல் அல்லது வீட்டிலேயே கல் உப்பு சேர்த்த நீரில் குளிக்க வேண்டும்.அதிகாலை 4:30க்கு மேல் சந்திரனை பார்க்கலாம். பரிகார ராசியினர் ஜூலை 28 சனிக்கிழமை காலை கட்டாயம் கோயிலுக்கு செல்ல வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...