சிறுமியின் தலைக்குள் 100 நாடாப்புழுக்கள்!
எட்டு வயது சிறுமியின் மூளையில் 100 நாடாப்புழு முட்டைகள் இருந்தது பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி கடந்த சில மாதங்களாகக் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை அங்குள்ள மருத்துவமனைகளில் காண்பித்துள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்களும் தலைவலிக்கான மாத்திரைகளைக் கொடுத்து வந்துள்ளனர். இருந்தபோதும் அவருக்குத் தலைவலி குறைந்ததாகத் தெரியவில்லை. பிறகு, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது நிலைமை கவலைக்கிடமானது. சிகிச்சையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மாத்திரை மற்றும் மருந்துகளால் சிறுமியின் உடல் 40 கிலோவில் இருந்து 60 கிலோவாக எடை கூட ஆரம்பித்தது. எடை கூடுதலால் சிறுமியால் நடக்க முடியவில்லை. அதனோடு மூச்சுத்திணறலும் அதிகரித்தது.
இதையடுத்து, சிறுமியின் தலையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவரின் தலையில் 100 நீர்க்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. நன்கு பரிசோதித்த மருத்துவர்கள் அது நீர்க்கட்டிகள் அல்ல நாடாப்புழு முட்டைகள் என்ற அதிர்ச்சிகர தகவல்களைத் தெரிவித்தனர். வயிற்றிலிருந்து ரத்த நாளங்கள் மூலம் இந்த முட்டைகள் மூளையை அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவின்றி இருந்துள்ளார்.
இதுகுறித்து, தனியார் மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் பிரவீன் குப்தா கூறியதாவது: “சிறுமி நாடாப்புழுக்களால் பாதிக்கப்பட்ட உணவு வகைகளை உட்கொண்டிருப்பார். இதனால் எதிர்பாராத விதமாக சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். ரத்த நாளங்கள் மூலம் இந்த முட்டைகள் மூளையை அடைந்துள்ளன. இது நரம்பியல் மண்டலத்தைத் தாக்கியதால் அவருக்குத் தலைவலி மற்றும் வலிப்பு ஏற்பட்டுள்ளது. நாடாப்புழுக்களின் முட்டைகளை அழிப்பதற்காகச் சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நடக்க ஆரம்பித்துள்ளார். விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்” என்று தெரிவித்துள்ளார்.
Oh God
ReplyDelete