உகாண்டாவில் உள்நாட்டு வருமானத்தை அதிகரிக்கவும், போலிச் செய்திகளை ஒழிக்கவும் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
1986ஆம் ஆண்டு முதல் உகாண்டா நாட்டின் குடியரசு தலைவராகப் பணியாற்றிவரும் யோவெரி முஸ்வேனி, கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளங்கள், போலி செய்திகளை ஊக்குவிப்பதாகத் தெரிவித்திருந்தார். தற்போது உகாண்டா பாராளுமன்றத்தில் புதிய சட்டத்திற்கான ஒப்பதல் வழங்கப்பட்டதும், சட்ட குறிப்பில் கையொப்பமிடுவதாக முஸ்வேனி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஜூலை 1 முதல் அமலாக்கத்துக்கு வரும் புதிய வரிச் சட்டத்தால், குறிப்பிட்ட செயலிகள் அல்லது சேவைகளைப் பயன்படுத்துவோர் தினமும் 200 ஷில்லிங் வரி (இந்திய மதிப்பில் 3.54 ரூபாய்) செலுத்த வேண்டும் என பிசிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டின் நிதியமைச்சருக்குப் பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில், "சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்படும் வரியானது நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். அதிகரித்துவரும் நாட்டின் கடன் சுமையைக் குறைக்கவும் இது உதவிகரமாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றச் செய்தி தொடர்பாளர் க்ரிஸ் ஒபோர், "இந்த சட்ட மசோதா, அடுத்த நிதியாண்டு அதாவது, ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். உகாண்டா மக்கள் அதிகளவு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது நாட்டின் வருவாய்க்கு இந்த மசோதா முக்கியப் பங்களிக்கும்" என்று தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...