சத்துணவு மையங்களுக்கு சோப்பு, நகம்வெட்டி உள்ளிட்ட சுகாதாரப் பேழைகள்
வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா அறிவித்தார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து
அமைச்சர் வி.சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்: எம்ஜிஆர் சத்துணவுத்
திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 52 லட்சம் பள்ளிக் குழந்தைகள் 43,205 சத்துணவு
மையங்கள் வாயிலாக பயனடைந்து வருகின்றனர். இந்த மையங்களில் உணவு
சமைக்கும்போதும், பரிமாறும்போதும் சுகாதாரத்தினைக் கடைப்பிடிக்க சத்துணவு
சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு மையம் ஒன்றுக்கு ரூ. 400 செலவில் சோப்பு,
நகம்வெட்டி, துண்டு, கையுறைகள் போன்றவை உள்ளடக்கிய சுகாதாரப் பேழைகள்
அனைத்து மையங்களுக்கும் ரூ.1.73 கோடியில் வழங்கப்படும்.
குழந்தைகள் நலக் குழுக்கள்: பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக சென்னை
மாவட்ட குழந்தை நலக் குழு அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைக் கையாள
வேண்டியுள்ளது. எனவே, பராமரிப்பு, பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின்
நலனைக் கருத்தில் கொண்டு வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு ஏதுவாக சென்னை
மாவட்டத்துக்குக் கூடுதலாக இரண்டு புதிய குழந்தைகள் நலக் குழுக்கள்
ஏற்படுத்தப்படும். இதற்கு ஓராண்டுக்கு கூடுதலாக ரூ.21.25 லட்சம் நிதி
ஒதுக்கீடு செய்யப்படும்.
குடிநீர் வசதி: 1,132 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.1.13 கோடியில் தேவையான குடிநீர் வசதி வழங்கப்படும்.
திருநங்கைகள் மானியம் ரூ.50,000: திருநங்கைகள் தங்களது வாழ்வாதாரத்தைப்
பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்ளும் பொருட்டு வருவாய் ஈட்டும்
நடவடிக்கைகள் மேற்கொள்ள மளிகைக் கடை அமைத்தல், கறவை மாடுகள் வளர்த்தல்,
சிற்றுண்டி உணவகம் அமைத்தல் போன்ற தொழில் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ. 20
ஆயிரமாக வழங்கப்பட்ட மானியம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தி ஆண்டொன்றுக்கு 150
திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ரூ.75 லட்சம் செலவில் இந்தத் திட்டம்
செயல்படுத்தப்படும். சத்துணவில் முட்டை சாப்பிடாத பயனாளிகளுக்கு
வழங்கப்படும் வாழைப் பழத்தின் விலை ரூ.1.25-இலிருந்து ரூ.3.50-ஆக உயர்த்தி
வழங்கப்படும்.
அரசு சேவை இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் உணவூட்டு செலவினம் மாதம்
ரூ.400-இலிருந்து ரூ.900-ஆக உயர்த்தப்படும். ஆண்டு பராமரிப்புச் செலவினம்
ரூ.150-இலிருந்து ரூ.500-ஆக உயர்த்தப்படும் என்றார் அமைச்சர் சரோஜா.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...