அரசுப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள்
ஏற்படுத்தித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர்
வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது மாணவர்களின்
எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக குடிநீர் வசதிகள் தேவைப்படும் 2,448 அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட
குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப உதவியுடன்
அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக 2,283 திறன் வகுப்பறைகள்
அமைக்கப்படும்.
நடப்புக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பாடத்
திட்டத்தை மாணவர்களுக்கு சீரிய முறையில் பயிற்றுவிக்க ஏதுவாக, அனைத்து
ஆசிரியர்களுக்கும் பணியிடைப் பயிற்சி அளிக்கப்படும். தலைமை ஆசிரியர்கள்
அவர்களது தலைமைப் பண்பினை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியும், ஆய்வு
அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் மேற்கொள்ளப்படும்.
மாதிரிப் பள்ளிகள்: மாவட்டத்துக்கு ஓர் அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32
மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு
வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். வளர்ந்து வரும் அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, இந்தப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாகச்
செயல்படும் வகையில், ஒரு பள்ளிக்கு ரூ.50 லட்சம் வீதம் ரூ.16 கோடி செலவில்
மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும்.
திறன் அட்டை திட்டம்: அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன் அட்டை
வழங்கும் திட்டம் ஏற்கெனவே தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பல்வேறு புதிய
அம்சங்கள், ஆதார் எண் இணைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட திறன் அட்டையாக
நிகழ் கல்வியாண்டில் வழங்கப்படும். இந்தத் திட்டம் அரசு மற்றும் அரசு
நிதியுதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...