பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை துவக்க உள்ளனர்.
சென்னையில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்குகின்றனர். மாவட்டங்களில் மாலை நேரங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுகின்றனர். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம் என பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், 7வது ஊதியக் குழு அறிவித்தபிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். மேலும் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தியபோது ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்,
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய வித்தியாசத்தை சரி செய்ய வேண்டும், தொகுப்பு ஊதியத்தின் கீழ் சம்பளம் பெற்று வருவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் தான் பிரதானமாக முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஜாக்டோ-ஜியோ சார்பில் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. அதனால், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. பின்னர் ஊதிய முரண்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை அரசு வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அரசும் ஒப்புக் கொண்டது.
ஆனால் இதுவரை அந்த பரிந்துரையை அரசு வெளியிடவில்லை. ஆனால் அந்த குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 8ம் தேதி சென்னையில் நடந்த ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டத்தின்போது, ஒரு நபர் கமிட்டியில்தான் நீங்கள், உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் நேரில் ஆஜராகி தங்கள் கருத்தை தெரிவித்தனர். அப்போது ஜூன் 11ம் தேதி சென்னையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்தது. இன்று சென்னையில் தொடர் உண்ணாவிரதம் தொடங்குகிறது.
இதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் என சுமார் 500 பேர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதுதவிர அந்தந்த மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலையில் ஆர்ப்பாட்டமும் நடத்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
* 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம் என பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
* 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தியபோது ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
* புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...