கல்வி மனிதர்களை பண்படுத்தவும் அவர்களின் நாகரிக வளர்ச்சிக்கும் உதவியாகஇருக்கிறது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஒரு
குழந்தையைப் படிக்கவைப்பது எளிமையானதா என்ன? எல்.கே.ஜி வகுப்புக்கே
ஆயிரங்களில் தொடங்கி லட்சக்கணக்கில் ரூபாயைச் செலவழிக்க வேண்டியுள்ளது.
இதனால், மக்களின் இயல்பான பொருளாதார முன்னேற்றம் தடைப்பட்டு, சம்பாதிப்பதை
எல்லாம் பிள்ளைகளின் கல்விக்கே செலவழிக்க வேண்டியுள்ளது. லட்சங்களில்
கொடுத்து, தனியார் பள்ளியில் படிக்கவைக்கும் நிலை ஒருபுறம் என்றால், இலவசக்
கல்வி தரும் அரசுப் பள்ளிகள் ஒருபுறம். ஆனால், அரசுப் பள்ளிகளில் தங்கள்
பிள்ளைகளைச் சேர்க்க பலருக்கும் ஒரு தயக்கம் இருக்கிறது. இந்தத்
தயக்கத்தைப் போக்கி, அரசுப் பள்ளிகள் பற்றி மக்களிடம் விழிப்புஉணர்வு
ஏற்படுத்த, பேராசிரியர் வசந்தி தேவி தலைமையில் `பள்ளிக் கல்விப் பாதுகாப்பு
இயக்கம்' தொடங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், இதன் தொடக்க விழா நடந்தது. அதில் பேசிய வசந்தி தேவி, ``ஒரு குழந்தை தன்னை, சமூகத்தைப் புரிந்துகொள்ளவே கல்வி. உரையாடுதல், ஊடாடுதல் ஆகியவை கற்றலின் பிரதான அம்சங்கள். நன்கு வளர்ச்சியடைந்த பெரும்பாலான நாடுகளில் இலவசக் கல்வி முறையே இருக்கிறது. முதலாளித்துவ நாடுகள் பலவற்றிலும் இந்த நடைமுறையே உள்ளது. உண்மையில், இந்தியா அவர்களோடு போட்டி போடவேண்டிய விஷயங்கள் இவைதாம். இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதும், முழுமையாகச் செயல்படுத்துவதும் பஞ்சாயத்து அமைப்புகள்தாம். ஆனால், அவையும் சில அரசியல்வாதிகளால் சரியாக நடைபெறுவதில்லை. இந்த நிலையை மாற்றவேண்டியது அவசியம். 2009-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்விக்கு உத்திரவாதம் அளிக்கும் சட்டமாக இது இயற்றப்பட்டாலும், இன்னமும் 10 சதவிகித பள்ளிகள்தாம் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.
வசந்தி தேவி
`பள்ளி மேலாண்மைக் குழு' என்ற ஒன்றை பள்ளிகளில் அமைக்க வேண்டும் என்ற விஷயமே பல பெற்றோருக்குத் தெரியவில்லை. இந்தக் குழுதான் பள்ளிக்குத் தேவையானவற்றைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். பள்ளியின் இயக்கத்தைக் கண்காணிக்கவும் இந்தக் குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவில் 20 பேர் இடம்பெறுவர். அதில், சரிபாதி பெண்களாக இருக்க வேண்டும். 75 சதவிகிதம் மாணவர்களின் பெற்றோர்களாக இருப்பது அவசியம். ஒதுக்கப்பட்ட, நலிந்த பிரிவினர் குழுவில் இடம்பெறுவது கட்டாயம். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவர், உள்ளூர் கல்வியாளர், புரவலர், தன்னார்வத் தொண்டு நிறுவர், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் எனப் பலரை உள்ளடக்கிய குழுவாக அது இருக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழுவை அமைத்தால் மட்டும் போதாது. குறைந்தது மாதம் ஒருமுறையாவது கூடி, பள்ளியின் வளர்ச்சி குறித்து உரையாட வேண்டும். ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருகிறார்களா? அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து பள்ளிக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா? இதுபோன்ற பல விஷயங்களை அந்தக் குழு தன் பணியாக எடுத்துச் செய்ய வேண்டும். அதற்கான உரிமையை அரசியலமைப்பு வழங்கியிருக்கிறது.
பள்ளிக்குத் தேவையானவற்றை கிராம சபையில் கோருவது எங்களின் முக்கியப் பணி. இதற்கான களப்பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து வருகிறோம். ஒவ்வொரு பள்ளியும் அமைந்துள்ள ஊரின் இளைஞர்கள், மாணவ அமைப்பினர், அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் என நியமித்து வருகிறோம். குறிப்பாக, எங்களின் செயல்பாட்டில் பெண்களின் பங்களிப்பு பிரதானமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஊருக்கு 10 பேர் முன்வந்தாலே கல்வியில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடலாம். வர வேண்டும். நிச்சயம் வருவார்கள் என நம்புகிறோம்.
இந்த அமைப்பு, தமிழகம் முழுவதும் சிறிய அளவில் இயங்கிக்கொண்டிருக்கும் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட கல்விக் குழுக்களை ஒருங்கிணைத்துச் செயல்படவிருக்கிறது. எங்களின் முக்கியக் குறிக்கோள்கள், பொதுப் பள்ளிகளும், வீட்டுக்கு அருகிலான தொடக்கப் பள்ளிகளும் வளர்க்கப்பட வேண்டும். மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குள் கொண்டுவர வேண்டும். அங்கன்வாடி மையங்கள் முன் பருவக் கல்வி மையங்களாக மாற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவை. இதற்காக, மாவட்டம் தோறும் பொறுப்பாளர்களை நியமித்து வருகிறோம். இளைஞர்கள் தாமாக முன்வந்து எங்களோடு இணைந்து செயல்பட வேண்டும். அப்போதே தமிழகக் கல்வியை மேம்படுத்த இயலும்" என்றார்.
முன்னதாக, கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வாழ்த்து தெரிவித்தார். கல்வியாளர் ச.மாடசாமி, `சுடர்' நடராஜன், மூர்த்தி, ஆசிரியர்கள் உமாகேஸ்வரி, மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...