பள்ளிகளின் தரம் உயர்வுக்காக பொது மக்களிடம் இருந்து பெறப்படும்
பங்களிப்புத் தொகையை விலக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் தங்கம்
தென்னரசு கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கை தொடர்பாக, முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசித்து
முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
பதில் அளித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது,
பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வியைத்
தொடர்ந்து நடந்த விவாதம்:-
பூங்கோதை (திமுக): தமிழகத்தில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கை
குறைந்து கொண்டே செல்கிறது. எனவே, ஆங்கிலமும் தமிழும் கலந்து போதிக்கும்
இருமொழி கற்றல் வகுப்புகளை சோதனை அடிப்படையில் தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் தொடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: ஆங்கில வழியிலான தொடக்கப் பள்ளிகளைத் தொடங்க தமிழக
அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சமூக நலத் துறை அமைச்சருடன்
கலந்து பேசி ஆய்வு செய்து வருகிறோம்.
தங்கம் தென்னரசு (திமுக): பள்ளிகளைத் தரம் உயர்த்தும் போது, பொது மக்களின்
பங்களிப்பாக நிதி கோரப்படுகிறது. குறிப்பாக, நடுநிலைப் பள்ளிகளை உயர்
நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த ரூ.1 லட்சமும், உயர் நிலைப் பள்ளிகளை
மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த ரூ.2 லட்சமும் பொது மக்களின்
பங்களிப்பாகக் கோரப்படுகிறது.
ஆனால், இப்போது அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் போன்ற திட்டங்களின்
வழியாக மாநில அரசுகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே,
பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகளவு இருக்கும்போது பள்ளிகளைத் தரம்
உயர்த்துவதற்காகப் பொது மக்களின் பங்களிப்பாக நிதி வசூலிப்பதை மறு பரிசீலனை
செய்ய வேண்டும்.
அரசு சார்பில் நிதி கோரப்படும் போது, அதனைச் சேகரிப்பதில் பெரும் சிரமம்
உள்ளது. எனவே, பள்ளிகள் தரம் உயர்வுக்கு பொது மக்களின் பங்களிப்பாக நிதி
வழங்க வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: பொது மக்களிடம் இருந்து பெறப்படும் நிதியானது,
புதிய கட்டடங்கள், இருக்கைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவே
பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், உறுப்பினரின் கோரிக்கை சரியான கருத்து. இது
தொடர்பாக, முதல்வர், துணை முதல்வரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை
எடுக்கப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...