தற்போது தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் கற்பித்தல் முறைகள்
ஒருங்கிணைக்கப்பட்டு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசின் அனைத்துப்
பள்ளிகளில் சீருடையிலும் சமச்சீர் தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்று
கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மெட்ரிக்., ஆங்கிலோ இந்தியன் போன்ற பல்வகை
கல்விமுறைகள் மாற்றப்பட்டு மாநில அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள்
அனைத்துக்கும் ஒரே பாடமுறையான சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டு, அரசு
மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஒரே கல்வி முறை கற்பிக்கப்படுகிறது.
இதனால் பல நகரங்களில் தனியார் பள்ளிகளில் இருந்து பெற்றோர்கள் தங்களது
பிள்ளைகளை அரசுப் பள்ளிகளுக்கு மாற்றத் தொடங்கியுள்ளனர். மேலும், தனியார்
பள்ளிகளுக்கு ஈடாக பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்களை அதிக
மதிப்பெண்களைப் பெற வைக்க ஆசிரியர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு
வருகின்றனர். இதன்மூலம் ஆண்டுக்கு ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி
விகிதம் அதிகரித்து வருகிறது.
தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்கள் மாநிலத்தில், மாவட்டத்தில், நகரில்
முதல் இடம் பிடித்துள்ளதாக விளம்பரப்படுத்தி வந்த நிலையில், தற்போதைய தமிழக
அரசு அதற்கும் முற்றுப்புள்ளியை வைக்கும் வகையில், ஒட்டுமொத்த தேர்ச்சி
விவரத்தை மட்டுமே வெளியிடலாம் என உத்தரவிட்டுள்ளது.
இதனால் பல அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் சேர்க்கை சதவீதங்கள் அதிகரித்துள்ளன.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி,
மடிக்கணினி உள்ளிட்டவை வழங்கப்படுவதால், 8-ஆம் வகுப்பு வரை தனியார்
பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கூட 9-ஆம் வகுப்புக்கு அரசுப்
பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு 9-ஆம் வகுப்பில்
சேர்ந்துவிட்டால் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு அதே பள்ளியில் உறுதியாக
இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது.
குறிப்பாக அரசுப் பள்ளிகளிலும் பொதுத் தேர்வு மாணவர்களுக்கென காலை, மாலை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தாங்கள் பணிபுரியும் பள்ளி நற்பெயர் பெறவும், தங்களது மாணவர்கள்
மேல்படிப்புக்குச் சென்றால் தங்களுக்கும் நற்பெயர் ஏற்படுகிறது என்ற
உண்மையை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு இவ்வாறான சிறப்பு வகுப்புகளை
நடத்துகின்றனர். பல பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 100 சதவீதத்தைத் தொட்ட
நிலையிலும், மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைப்பதற்காக இந்த வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் சில அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு
பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்
நீட் தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே
நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் அனைத்து விதங்களிலும் தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசு மற்றும்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் தரம் உயர்ந்து வரும் நிலையில், மாணவர்களின்
சீருடையிலும் அரசு தனது கவனத்தைச் செலுத்த வேண்டும் என கல்வியாளர்கள்
கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், அரசு மற்றும் அரசு நிதியுதவி
பெறும் பள்ளிகளுக்கும் ஒரே நிறத்தில் சீருடைகளை வழங்க வேண்டும்.
அதாவது 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தற்போது இருக்கும் 4 விதமான
சீருடைகளின் நிறத்தை தனியார் பள்ளிகளிலும் பின்பற்ற வைத்தால் முழுமையான
சமச்சீர் கல்வி அங்கு உருவாகும். இதனால் தனியார் பள்ளி மாணவர்கள், அரசுப்
பள்ளி மாணவர்கள் என வேறுபடுத்திப் பார்க்கும் நிலை இருக்காது.
எனவே, பள்ளிக் கல்வித் துறையும், மாநில அமைச்சரும் இவ்விஷயத்தில் கவனம்
செலுத்தி, சமச்சீருடையை அமல்படுத்தினால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப்
பள்ளி மாணவர்களின் சீருடையும் ஒரே நிறத்தில் ஜொலிக்கும் என்பதே கல்வி
ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...