நாடு முழுவதும், இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தரம் மிகவும்
மோசமாக உள்ளதாக, பிரபல, தகவல் தொழில் நுட்ப நிறுவன நிர்வாகி கூறியுள்ளார்.
'இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 94 சதவீதம் பேர், வேலையில் நியமிக்க தகுதி
அற்றவர்கள்' என, அவர் கூறியிருப்பது, இன்ஜினியரிங் மாணவர்களை அதிர்ச்சி
அடையச் செய்துள்ளது.
இன்ஜினியரிங்,கல்லூரி,தரம்,மோசம்,பணியில்,அமர்த்த, லாயக்கில்லாத,94 சதவீத,பட்டதாரிகள்
கடந்தாண்டு, 'ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்' என்ற வேலை மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய
ஆய்வில், 'நாட்டின், 95 சதவீத இன்ஜினியர்கள், மென்பொருள் மேம்பாட்டு
வேலையில் சேர்க்க தகுதி அற்றவர்கள்' எனத் தெரிய வந்தது. இந்த ஆய்வு முடிவை,
பிரபல தகவல் தொழில் நுட்ப வல்லுனர், மோகன்தாஸ் பாய், திட்டவட்டமாக
மறுத்தார். 'இந்த ஆய்வு முடிவுகள், வெறும் குப்பை' என, அவர் கடுமையாக சாடி
இருந்தார்.
'மணிபால் குளோபல் எஜுகேஷன்' நிறுவன தலைவரான, மோகன்தாஸ் பாய், 'இன்போசிஸ்'
நிறுவன இயக்குனர் குழுவில் உறுப்பினராக இருந்தவர். 'ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்'
ஆய்வு முடிவை, பயோகான் நிறுவன தலைவர், கிரண் மஜும்தாரும்
நிராகரித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய தகவல் தொழில் நுட்ப துறை ஜாம்பவான்களில் ஒருவரான, டெக்
மஹிந்திரா நிறுவன தலைவரும், மேலாண்மை இயக்குனருமான, சி.பி.குர்னானி
கூறியுள்ளதாவது: இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தரம் மோசமாக உள்ளதால்,
இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 94 சதவீதம் பேர், வேலைக்கு தகுதி அற்றவர்களாக
உள்ளனர். நாட்டின், 10 முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்,
இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 6 சதவீதம் பேரை மட்டுமே பணியில்
அமர்த்துகின்றன. மீதமுள்ள, 94 சதவீதம் பேரின் நிலை என்ன?
வேலையில் நியமிப்பதற்கான திறனுடன் இன்ஜினியரிங் பட்டதாரிகள் இல்லாததால், அவர்களை பணியில் அமர்த்திய பின்,
அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காகவே,
டெக் மஹிந்திரா நிறுவனம், 5 ஏக்கர் நிலத்தில், 'டெக் அண்ட் லேர்னிங்
சென்டர்' என்ற பயிற்சி மையத்தை நிறுவியுள்ளது. பிற முன்னணி நிறுவனங்களும்,
பயிற்சி மையங்களை நிறுவி, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் இன்ஜினியரிங்
பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கின்றன.
வேலையில் நியமிக்கப்படும் பட்டதாரிகளை, விஷய ஞானம் உள்ளவர்களாக, தக்க திறன்
பெற்றவர்களாக, வேலைக்கு உகந்தவர்களாக மாற்றும் பெரிய பொறுப்பு, தகவல்
தொழில் நுட்ப நிறுவனங்கள் தலையில் விழுந்துள்ளது.
டில்லி போன்ற பெரிய நகரங்களில், பிளஸ் 2 தேர்வில், 60 சதவீத மதிப்பெண்
பெற்ற மாணவன், பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிப்பதில்லை; மாறாக, இன்ஜினியரிங்
படிப்பில் சேர்கிறான். இத்தகைய மாணவர்களை, வேலையில் சேர்வதற்கான தகுதி
உடையவர்களாக மாற்றும் வகையில், நம் கல்வி இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
இந்திய தகவல் தொழில் நுட்ப துறைக்கு, திறமைசாலிகளே தேவை. 2022க்குள், தகவல்
தொழில் நுட்ப துறைக்கு, 60 லட்சம் ஊழியர்கள் தேவை என, 'நாஸ்காம்'
எனப்படும், தேசிய மென் பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்கள் கூட்டமைப்பு
கணித்துள்ளது. ஆனால், நம்மிடம் திறமைசாலிகளுக்கு பற்றாக்குறை உள்ளது; இது,
மிகப்பெரும் சவாலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
குர்னானியின் கருத்து, ஆஸ்பைரிங் மைண்ட்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளை
பிரதிபலிப்பதாக உள்ளது. இக்கருத்து, இன்ஜினியரிங் மாணவர்கள் மத்தியில்
கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தரமற்ற கல்லுாரிகளுக்கு மூடுவிழா :
இந்தியாவில் உள்ள கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பின் தரம் மிகக் குறைவாக
உள்ளதென்ற கருத்து, சமீப காலமாக பரவலாக பேசப்படுகிறது. ஐ.ஐ.டி., போன்ற,
தொழில்நுட்ப கல்வி மையங்கள் தவிர, பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லுாரிகளால்,
தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியவில்லை.
தரம் குறைந்த இன்ஜினியரிங் கல்லுாரிகள், நாடு முழுவதும் புற்றீசல் போல், பல
ஆண்டுகளாக முளைத்து விட்டதே, இந்த நிலைக்கு காரணம் என, இத்துறை நிபுணர்கள்
கூறுகின்றனர். இந்த கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை
கிடைப்பதில்லை. அதனால், இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இத்தகைய கல்வி நிறுவனங்கள் அதிகளவில் மூடப்பட்டு
வருகின்றன. இதனால், நடப்பாண்டில் மட்டும், 80 ஆயிரம் இடங்கள், இன்ஜினியரிங்
கல்லுாரிகளில் குறைந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், 3.1 லட்சம்
இடங்கள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில், 200 இன்ஜினியரிங் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளதாக,
ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்
தெரிவித்துள்ளது.
1.4 சதவீதம் மட்டுமே, 'ஓகே' :
'ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்' நிறுவனம் நடத்திய ஒரு தேர்வில், 4.77 சதவீத மாணவர்கள்
மட்டுமே, ஒரு மென்பொருளுக்கான, சரியான தர்க்கத்தை எழுதக் கூடியவர்களாக
இருந்தனர். 500 கல்லுாரிகளில், தகவல் தொழில் நுட்ப பிரிவில் பயின்ற, 36
ஆயிரம் பேர், 'ஆட்டோமேடா' என்ற, மென்பொருள் மேம்பாட்டு திறன் மதிப்பீடு
சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில், 60 சதவீதம் பேரால், சரியான
மென்பொருள் கட்டளைகளை எழுத இயலவில்லை. 1.4 சதவீதம் பேர் மட்டுமே மிக சரியான
மென் பொருள் கட்டளை எழுதுபவராக இருந்தனர். 'மெக்கானிகல் டிசைன்'
இன்ஜினியர்களில், 5.55 சதவீதம் பேர், சிவில் இன்ஜினியர்களில், 6.48 சதவீதம்
பேர், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்களில், 7.07 சதவீதம் பேர் மட்டுமே,
பணியில் அமர்த்தக்கூடிய திறன் பெற்றவர்கள் என, ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்'
கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...