சட்டசபையில் நேற்று தி.மு.க. உறுப்பினரும்,
முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி (திருக்கோவிலூர் தொகுதி), கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து பேசினார். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அரசு மூட இருப்பது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தொடக்க கல்வியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 29,297 ஆகும். இதில், 85,109 இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஆசிரியர்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு (2017) ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை, ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர் எழுதினார்கள். இவர்கள் அனைவரும் வேலைக்காக காத்திருப்பவர்கள். இடைநிலை ஆசிரியர்களின் நியமனங்கள் வெகுவாக குறைந்துள்ளதால், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேருவதற்கு விருப்பம் காட்டுவதில்லை.
கடந்த ஆண்டு 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 2,650 இடங்களில் 1,047 மாணவர்களும், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 480 இடங்களில் 113 மாணவர்களும், 7 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 350 இடங்களில் 66 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர்.
இவை தவிர, 40 அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 3,360 இடங்களில் 459 பேரும், 279 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 19,150 இடங்களில் 3,419 பேரும் மட்டுமே சேர்ந்தனர்.
நடப்பு கல்வியாண்டில், 10 உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 47 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிட்டு, மூடுவதற்கு அனுமதி வேண்டியுள்ளன. இப்படிப்பட்ட நிலையே அனைத்து மாநிலங்களிலும் உள்ளதால், மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பயிற்சிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்களை பணியிடைப் பயிற்சிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளது.
எனவே, 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணி முன் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி, அப்பயிற்சி நிறுவனங்களில் பணியிடைப் பயிற்சி மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 மாவட்டங்களில் பணிமுன் பயிற்சி மற்றும் பணியிடை பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...