தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு பிறகு படிப்பைக் கைவிட்டால், 10லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள் ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், "தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்று சேரும் மாணவர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 19ஆம் தேதிக்குள் இடங்களைக் கைவிட்டால் ஒப்பந்தத்தைத் மீறியதற்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். ஆகஸ்ட் 19ஆம் தேதி மற்றும் அதற்கு பிறகு இடங்களைக் கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்" என்று மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் கண்டனம் தெரிவித்து இன்று (ஜூன் 16) அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவான சமூகநீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்த புதிய நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்" என்று கூறியுள்ளார். பல லட்சம் பணம் கட்டி சேர்ந்த மாணவர்கள் திடீரென விலகி விட்டால் அவர்கள் மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய கட்டண வருவாய் பாதிக்கப்படும் என்பதால், அதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதைத் தேர்வுக்குழு உறுதி செய்திருக்கிறது. தனியார் கல்லூரிகளின் வருமானம் குறையாமல் பார்த்துக் கொள்வதில் தமிழக அரசு காட்டும் ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது என்றும் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
"அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் இடையில் விலகினால் அவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை. அரசுக்கு இழப்பு ஏற்பட்டால் பரவாயில்லை... தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்று நினைக்கும் அரசு மக்கள் நலன் காக்கும் அரசாக இருக்க முடியாது" என்று விமர்சித்துள்ள ராமதாஸ், இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பது சரி தான். ஆனால், இதற்கான தீர்வு மாணவர்களிடம் அபராதம் வசூலிப்பது அல்ல. மாறாக, இந்திய மருத்துவக் குழுவுடன் பேசி ஏதேனும் மாணவர்கள் விலகினால் அவர்களுக்கு பதில் வேறு மாணவர்களை அரசுத் தேர்வுக்குழு மூலமாக சேர்க்க வகை செய்வது தான் சரியானதாக இருக்கும் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் "தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, மாணவர்கள் விலகுவதால் காலியாகும் இடங்களை அடுத்த நிலையிலுள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்புவதற்கு வகை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவா் திரு.இராமதாஸ் அவர்கள் கருத்து நியாயமானதே. மருத்துவம் படிப்பில் சோ்ந்தவா்கள் பிடிக்காததால் பொறியியல்துறையை தோ்வு செய்வது இயல்பானது.இதை அனுமதிக்க வேண்டும். அதற்காக அபராதம் விதிப்பது அநியாயம். அதற்கு பதில் மாணவர்களை சோ்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
ReplyDelete