'அரசு
பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு, 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும்.
நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை
அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.
சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக, செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவுகள், மின்னணு வருகைப் பதிவு எனப்படும், 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும். அதற்கு, ஒன்பது கோடி ரூபாய் செலவிடப்படும்.அரசு பள்ளிகளில், 6.23 கோடி ரூபாய் மதிப்பில், நுாலகங்கள் அமைக்கப்படும்.மாணவர்கள், திறன் சார்ந்த கல்வியை பெறும் வகையில், 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 3.55 கோடி ரூபாய் செலவில், தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்.
தொன்மை வாய்ந்த கட்டடம், அரிய வகை நுால்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாக்கும் வகையில், 1.50 கோடி ரூபாய் செலவில், குளிர்சாதன வசதியுடன், கன்னிமாரா நுாலகம் புதுப்பிக்கப்படும்.காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மூன்று நுாலகங்கள், 1.50 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய, மாதிரி நுாலகங்களாகமாற்றப்படும்.
காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மாணவர்களை ஈர்க்கும் திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.இத்திட்டம், இந்த கல்வியாண்டில், 1.28 கோடி ரூபாய் செலவில், அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.அனைத்து ஒன்றிய தலைமை இடங்களிலும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக, ஒரு கோடி ரூபாய் செலவில், 'ஆதார்' சேர்க்கை மையங்கள் ஏற்படுத்தப்படும்.மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 32 விளையாட்டு மேம்பாட்டு பள்ளிகள், 96 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக, 96 லட்சம் ரூபாய் செலவில், கணினி மூலமாக, நவீன தொழில்நுட்பத்துடன், பேசும் கருவி, பேசும் புத்தகம், மென்பொருள், கற்றல் உபகரணம், தொடுதிரை, தொடுகை வரைபடம், சிறப்பு விசைப்பலகை, ஒலிப்புத்தகம் ஆகிய வசதிகள், மாவட்ட மைய நுாலகங்களில் ஏற்படுத்தப்படும்.
வரும் கல்வியாண்டில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த, 90.97 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர் கல்வி நிறுவனங்களுடன், அரசு பள்ளிகளை இணைக்கும் திட்டம், 67 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.அரசு உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில், இடைநிலை கல்வி பயிலும் திறன்மிக்க மாணவர்கள், பிற மாநிலங்களில் உள்ள அறிவியல், தொழிற்நுட்பம், கல்வி சார்ந்த தேசிய நிறுவனங்களை பார்வையிட, வாய்ப்புகள் வழங்கப்படும்.இதற்காக, 40.20 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.
அனைத்து மாவட்ட நுாலகங்களிலும், 32 லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் டிவி அல்லது எல்.இ.டி., புரஜெக்டர்' வசதி ஏற்படுத்தப்படும்.குடிமைப் பணி தேர்வுகள் உட்பட, அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தேவைப்படும் தகவல்கள், உரிய நேரத்தில் சென்றடையும் வகையில், பொது நுாலகங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், மென்பொருள் உருவாக்கப்படும்.மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில், 32 மாவட்டங்களிலும், தலா, 5,000 ரூபாய் வீதம், 'நுாலக ஆர்வலர் விருது' வழங்கப்படும்.
முதற்கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை மாவட்ட நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்.மாணவர்களுக்கு, பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, 'இளம் படைப்பாளர் விருது' வழங்கப்படும். மாணவர்களுக்கு பயன் தரும் வகையில், பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்த, 5,000 வீடியோக்கள் தொகுக்கப்பட்டு, தமிழக அரசு கேபிள் வழியாக, ஒரு மணி நேரம்ஒளிபரப்பப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...