நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.
மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வு வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.நீட் தேர்வு மையங்கள் வெளிமாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது மாணவர்களிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நெல்லையில் இருந்து வெளிமாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்வர்களின் விவரங்களை பள்ளிகளிடமிருந்து மாவட்ட நிர்வாகம் கேட்டுள்ளது. முதலமைச்சர் அலுவலகம் கேட்டு கொண்டதன் பேரில் இந்த விவரங்கள் சேகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்லையில் நீட் தேர்வுக்கென 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4,500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 3,390 பேருக்கு மட்டுமே நெல்லையில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு அண்டை மாநிலமான கேரளாவில் தேர்வு மையம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நெல்லையில் இருந்து 500 மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரோஸ் மேரி பள்ளியில் இருந்து விண்ணப்பித்த 135 பேரில் 105 பேருக்கு கேரளாவில் தேர்வு மையம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் முதலமைச்சர் அலுவலகம் கேட்டு கொண்டதால் மாணவர்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது. வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை எடுத்து வருகிறது. தூத்துக்குடியில் இருந்து 250 பேருக்கு எர்ணாகுளத்தில் நீட்தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...