உயர் கல்வி துறையில், தற்போது இருக்கும் பல்வேறு ஒழுங்குமுறை
அமைப்புகளுக்கு மாற்றாக, ஒற்றை ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க,
ஆளும்,பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது.2019 லோக்சபா தேர்தலுக்குள், அதற்கான மசோதா,பார்லி.,யில் தாக்கல்
செய்யப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்த சில
நாட்களில், வரைவு சட்டத்தை, அது தயார் செய்துள்ளது.உயர் கல்வி துறை,வரலாறு
காணாத மாற்றம்,வருகிறது,ஒற்றை ஒழுங்குமுறை ஆணையம்உயர் கல்வித் துறையில்,
பல்கலை மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில்,
தொழில்நுட்ப கல்விக்கான தேசிய கவுன்சில் போன்ற பல்வேறு ஒழுங்குமுறை
அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களில் நிகழும் விதிமீறல்கள்
உட்பட, அனைத்து பிரச்னைகளையும், இந்த அமைப்புகள் கட்டுப்படுத்தி
வருகின்றன.
வரைவு சட்டம் :
இந்நிலையில், உயர் கல்வி துறையை கட்டுப்படுத்த, பல்வேறு அமைப்புகளுக்கு பதில், சக்திவாய்ந்த ஒரே ஒழுங்கு முறை ஆணையத்தை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, உயர்கல்வி மதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அல்லது உயர் கல்வி ஒழுங்குமுறை கவுன்சில் என்ற பெயரில், அமைப்பை உருவாக்க, மத்திய அரசு, முடிவு செய்துள்ளது. இந்தஒற்றை ஆணையம் நடைமுறைக்கு வந்த பின், தற்போது இருக்கும், மற்ற ஒழுங்குமுறை அமைப்புகள் கலைக்கப்படும் என தெரிகிறது.இதற்கான, வரைவு சட்டத்தை, மத்திய அரசு இயற்றி உள்ளது. இந்த வரைவு சட்டம் மீது, முசோரியில் நடைபெறும், 2022ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கை கூட்டத்தில், மத்திய அரசு விவாதிக்க உள்ளது. பின், செப்டம்பரில் நடைபெறவுள்ள பார்லி., கூட்டத்தில், இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.அந்த மசோதாவின் விபரம்: மத்திய உயர் கல்வி துறையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள, ஒற்றை அமைப்புக்கு,உயர்கல்வி மதிப்பீடு மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம், கல்வி நிறுவனங்களுக்கான தரத்தை நிர்ணயம் செய்யும்; பாடம் கற்றுத் தரும் முறைகளை கண்காணிக்கும்; கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் ஓர் ஆண்டில், எப்படி உள்ளது என்பதை மதிப்பீடு செய்யும்.கல்வி நிறுவனங்களில் உள்ள ஒவ்வொரு பாடத்தின் தரத்தையும் மேம்படுத்த, பல்கலை மானிய குழு சார்பில், பல குழுக்கள் அமைக்கப்படுகின்றன. புதிய ஒழுங்குமுறை ஆணையத்திலும் அது பின்பற்றப்படும்.
கல்வித் தரம்:
கல்வி தரத்தை பாதுகாக்க தவறும் கல்வி நிறுவனங்களுக்கு, தேவையான பயிற்சியையும், வழிகாட்டுதலையும், புதிய ஆணையம் வழங்கும். இந்த ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் தரத்துடன் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும், மத்திய, மாநில அரசின் மானியங்கள் வழங்கப்படும். எல்லாருக்கும் பணத்தை வாரி வழங்காமல், அந்தந்த கல்வியாண்டிற்கான செயல் திட்டங்களை தெளிவாக கூறும் கல்வி நிறுவனங்களுக்கு, மானியங்கள் வழங்கப்படும்.மாநிலங்களில் இயங்கும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் ஆசிரியர்களை, இந்த ஒற்றை ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து விவாதங்கள் தொடர்ந்துநடக்கிறது. பல்கலை மானியக் குழுவைப் போல் அல்லாமல், இந்த ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, வானளாவிய அதிகாரங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட பாடப் பிரிவில், கல்வித் தரம் சரியில்லை என்றால், அந்தப் பாடப் பிரிவில், புதிய மாணவர்களுக்கான சேர்க்கையை நிறுத்தும் அதிகாரம், இந்த புதிய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உள்ளது.தரமான கல்வி வழங்காத, கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரமும் இந்த ஆணையத்திற்கு உள்ளது. கல்வி நிறுவனம் மற்றும் அதில் உள்ள துறைகளுக்கு, நிபுணர்களின் அறிவுரை வழங்கவும் வழிவகை செய்யப்படும்.
அபராதம்:
இந்த புதிய ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, புதிய பாடப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு, அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை செலுத்த தவறுபவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்க பரிந்துரை செய்யப்பட உள்ளது.உயர்கல்வி மதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில், 10 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். மிகச் சிறந்த கல்வியாளர் இதன் தலைவராகஇருப்பார். இவருக்கு கீழ், இரண்டு துணைதலைவர்கள் நியமிக்கப்படுவர். மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக பணியாற்றியவர்களும், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., இந்திய அறிவியல் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில், குறைந்தது ஐந்து ஆண்டுகள், இயக்குனர்களாக பதவி வகித்தவர்களும், இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.இந்த ஒழுங்குமுறை ஆணையம், தலைமை கணக்குதணிக்கை அலுவலகத்தின் கீழ் செயல்படும். கொள்கை சார்ந்த முடிவுகளுக்கு, மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பல நாள் கனவு!
* இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், மோடி அரசின் தலைமையில் செய்யப்பட்ட மிக முக்கியமான, மாற்றமாக இது கருதப்படும். உயர் கல்வி துறையில், மிகப் பெரிய மாற்றம் நிகழும்.
* 2017, மார்ச், 10ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கல்விக் கூட்டத்தில், இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட பேராசிரியர் யஷ்பால் கமிட்டி, தேசிய அறிவுசார் ஆணையம் மற்றும் மோடி அரசால் உருவாக்கப்பட்ட ஹரி கவுதம் குழு போன்றவை பலமுறை விவாதித்தும், இத்திட்டம், முழுமை பெறாமலேயே இருந்தது.
* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறை ஆட்சியில் இருந்தபோது, இதுபோன்ற ஒரு மசோதாவை தாக்கல் செய்ய, அப்போதைய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் முயற்சி மேற்கொண்டார். பல எதிர்ப்புகளால், அது நிறைவேறாமல் போனது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...