கிராமப் பள்ளி என்பதால் சாக்பீஸ் அளவாகத்தான் இருக்கும். ஞாயிறு நீங்கலாக 26 நாட்களுக்கு 26 சாக்பீஸ். தினம் ஒரு பாடத்தை எழுதிப்போடு. சிறியதாக எழுதாதே. அது பிள்ளைகளின் கண்களைப் பாதிக்கும். பெரிய எழுத்தாக எழுதாதே. சாக்பீஸ் அதிகம் கரையும்.’ கிராமப் பள்ளிகளின் நிலையைப் பட்டவர்தனமாக்கும் இந்த வசனம் ‘Not One Less’ என்ற சீனத் திரைப்படத்தின் இடம்பெற்றது.
இதுபோன்று உலகெங்கிலும் வெளிவந்த ஆசிரியர்கள் குறித்த திரைப்படங்களின் வழியாக மாணவர்-ஆசிரியர் உறவை, இன்றைய கல்வியின் நிலையைப் பல கோணங்களில் அலசுகிறது ‘கரும் பலகைக்கு அப்பால்…’ புத்தகம். திரைப்படங்களால் சமூகத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பது உண்மை என்றால் நேர்மறைத் தாக்கங்களையும் ஏற்படுத்த முடியும் என்ற பார்வையில் கலகலவகுப்பறை சிவா எழுதியிருக்கும் புத்தகம்.
புதிய ஆசிரியன் தேவை
சிறார்களுக்கும் பெரியவர்களுக்கும் இடைப்பட்ட குழப்பமான மனநிலையில் வளரிளம் பருவத்தினர் சிக்கித் தவிப்பார்கள். அப்பருவத்தில் இருக்கும் மாணவர்களைத் தான் சொல்வதை எல்லாம் கேட்கச் செய்வது ஆசிரியரின் வெற்றி அல்ல. அனுபவ அறிவு, நுண்ணறிவைப் பயன்படுத்தி அவர்களை மடைமாற்றுவதே ஆசிரியர் பணி என்பது 2012-ல் வெளிவந்த ‘Last Bench’ என்ற மலையாளத் திரைப்படத்தின் வழியாக இதில் பேசப்பட்டிருக்கிறது.
2010-ல் வெளிவந்த ‘Waiting for Superman’ என்ற ஆங்கில ஆவணப்படத்தை விவரிப்பதன் மூலமாக அமெரிக்காவின் அரசுப் பள்ளிகளுக்கும் இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும் இடையிலான வித்தியாசம் கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறது- இப்படி இந்தி, மலையாளம், ஆங்கிலம், சீனம், கொரியா உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த சில திரைப்படங்களை அடிநாதமாக வைத்துக் கல்வி அரசியலை இப்புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் அலசுகிறது.
“இன்றைய தலைமுறையினர் கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை’ என்பது ஒரு பொய்யான பரப்புரை என நிரூபிக்க முயன்றிருக்கிறார் நூலாசிரியர். இந்தியா போன்ற நாடுகளில் எத்தனையோ தடைகளை மீறிப் பெருவாரியான மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குக் கற்கும் ஆவல் தானாக வர வேண்டும் என்று சொல்லாமல், கற்பித்தலில் புதிய செயல்பாடுகளை முயற்சித்துப் பார்க்கும் ஆசிரியர்கள்தான் இன்றைய தேவை என்று வலியுறுத்துகிறது இந்நூல்.
சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் அறிவுரைகளை அள்ளி வீசும் புத்தகக் குவியலுக்கு மத்தியில் மாணவர்களைச் சகாக்களாகப் பாவித்துத் தோழமையோடு அணுகுவதே நல்லாசிரியரின் பண்பு என்பதை உணர்த்தும் பதிவு இப்புத்தகம்.
‘கரும்பலகைக்கு அப்பால்...’
கலகல வகுப்பறை சிவா
விலை: ரூ.70 | நீலவால்குருவி வெளியீடு
97/55, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை - 24.
தொலைபேசி: 94428 90626
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...