அரசின்,
'இ - சேவை' மையங்களுக்கு செல்லாமல், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே,
அரசின் சேவைகளை பெறும் வசதி, விரைவில் நடைமுறைக்கு வருகிறது.மத்திய, மாநில
அரசுகளின் சேவைகளை பொதுமக்கள் பெற வசதியாக, தமிழ்நாடு மின்னாளுமை முகமை
இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' வழியாக, இ - சேவை மையத்தை
செயல்படுத்தி வருகிறது.
4.6 கோடி சேவைகள் : கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் மையங்கள் என, மொத்தம், 10 ஆயிரத்து, 420 சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மையங்கள் வழியாக, 2017 - 18ல், 1.05 கோடி உட்பட, நான்கு ஆண்டுகளில், 4.6 கோடி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுமக்கள், இ-சேவை மையங்களுக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே, அரசு சேவைகளை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து, அரசு கேபிள் 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசின் சேவைகளாக, வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உட்பட, 114 சேவைகள். மேலும், மத்திய அரசின் சேவைகளான, பாஸ்போர்ட் விண்ணப்பம், 'ஆதார்' சேவை போன்ற, 95 சேவைகள் என, மொத்தம், 209 சேவைகள், அரசு, இ - சேவை மையங்கள் வழியாக வழங்கப்படுகின்றன. இனி, பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, அரசின் இந்த சேவைகளை பெற முடியும்.இதற்காக, திறந்தவெளி, 'போர்டல்' உருவாக்கப்படு கிறது. அரசு இ - சேவை இணையதளப் பக்கத்தில், 'குடிமக்கள் நுழைவு எண்' பதிவு செய்ததும், மொபைல் போனுக்கு, ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் வரும்.
முதற்கட்டம் : அதன் வழியாக, தங்களுக்கு தேவையான அரசு சேவைகளை பெற முடியும். முதற்கட்டமாக, வருவாய் மற்றும் சமூக நலத்துறை சேவைகளை மட்டுமே பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது. படிப்படியாக, இதர துறைகளின் சேவைகளை பொதுமக்கள் பெறலாம். இந்த திட்டம், விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...