Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்!" - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்

வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்ட விவகாரம் பூதாகாரமாக மாறிய நிலையில், ``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்" என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன் வேண்டுகோள்விடுத்துள்ளார். 

 
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற `பொன்மாலை பொழுது' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயச்சந்திரன், நடிகர் சூர்யாவின் `அகரம் ஃபவுண்டேஷன்' சார்பில் `அறம் செய விரும்புவோம் - அகரம் விதைத்திட்ட வெற்றிக் கதை' என்ற புத்தகம் வெளியிட்டார்.

விழாவில் பேசிய உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், ``நான் சென்னையில் அதிகம் நேசிக்கக்கூடிய இடங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் ஒன்று. `இந்த நூலகத்தில் அரங்கம் நிரம்பி வழியாதா' என்ற ஏக்கத்திலேயே பல இரவுகள் கழிந்தன. தற்போது அரங்கம் நிரம்பி இருப்பதைப் பார்க்கும்போது மனது பட்டாம்பூச்சியாகச் சுற்றுகிறது. 

இந்த மேடையில் பேசக் கூடாது என்றுதான் உறுதிமொழி வாங்கி வந்தேன். `பொன்மாலை பொழுது' நான் அமைத்துக்கொடுத்த மேடை. நானே பேசவில்லை என்றால் நீதிக்கு எதிரானது என்பதால், சில கருத்துகளை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.

எந்த ஒரு சமுதாயமும் தந்தை இல்லாத மகனை கருணையோடு பார்க்கும். ஆனால், தாயை இழந்த குடும்பத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என யோசித்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இலவசக் கல்விக்கான வாய்ப்பு வழங்கி வருவது அகரத்தின் சிறப்பு. இதுபோன்ற விஷயங்களை அரசும் கற்றுக்கொள்ள வேண்டும்.அகரம் அமைப்பின் இன்னொரு முக்கியமான அம்சம், வழிகாட்டுதல் (Mentrorship). என்னுடைய நண்பர்கள் பல நாடுகளில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். என்னுடன் பொறியியல் படிப்பில் படித்தவர்களின் நிறுவனங்களில், எப்படி ஆள்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை அறிவேன். 

அங்கு நெட்வொர்க்கிங் மூலமே பெரும்பாலானோரைத் தேர்ந்தெடுக்கின்றனர். நாம் படித்த கல்லூரியில் சற்று முன்னுரிமை கொடுப்பது மிகவும் அதிகம். அண்ணா, அக்கா என்று அழகாக வழிகாட்டி அழைத்தது சிறப்பு. அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளிலும் வழிகாட்டுதல் சற்று குறைவாக இருக்கிறது. இதையும் அகரத்திடமிருந்து அரசு கற்றுக்கொள்ள வேண்டும். 

மாணவர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. குறைந்தபட்சம், ரௌத்திரம் பழகக் கற்றுக்கொள்ள வேண்டும். சமூக அவலங்களைக் கண்டு கோபம்கொள்ளாவிட்டால், சமூகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கிட முடியாது. 

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, ஒரு மாணவன் பள்ளிப் படிப்பிலிருந்து கல்லூரிப் படிப்பைப் படிக்கச் செல்லும்போது, அவனின் குடும்பம் பொருளாதாரரீதியான சிக்கலில் விழுகிறது. கல்லூரியில் படிக்கும்போது கல்விக் கட்டணம் சரியாகக் கட்ட முடியவில்லை. கல்விக்கடன் கேட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகியபோது, வங்கி மேலாளர் `கல்விக்கடன் தர முடியாது' என வங்கியிலிருந்து வெளியே அனுப்பிவிடுகிறார். மிகவும் கடினப்பட்டு கல்லூரிப் படிப்பை முடிக்கிறான் அந்த மாணவன். 

படிப்பைப் முடித்த பிறகும் பலவிதமான கஷ்டங்களுக்கு மத்தியில் சமூகத்தில் முக்கியமான இடத்துக்கு வரும்போது தன்னுடைய எதிரி யார் என்பதை அவனே முடிவுசெய்கிறான். தன்னுடைய இளமைக்காலத்தில் கஷ்டப்பட்டதைபோல் மாணவர்கள் கஷ்டப்படக் கூடாது என நிறைய மாணவர்களுக்குக் கல்விக்கடன் கிடைக்க முயல்கிறான். அந்த நபர் வேறு யாருமல்ல உதயச்சந்திரனாகிய நான்தான்.ஈரோடு மாவட்டத்தில் ஆட்சித்தலைவராக இருந்தபோது, ஒரே மாதத்தில் சுமார் 8,000 மாணவர்களுக்கு 110 கோடி ரூபாய் கல்விக்கடன் கொடுக்கப்பட்டது. இதற்குக் காரணம் ரௌத்திரம் பழகியதுதான். ஆகவே, மாணவர்களும் இளைஞர்களும் ரௌத்திரம் பழகினால் மட்டுமே நாளைய சமூக மாற்றத்துக்கு உதவ முடியும்" என்றார். 

கல்வியாளர் கல்யாணி, 
``இன்று எல்லோரும் முக்கியமான பிரச்னையாக நீட் தேர்வைச் சொல்கின்றனர். ஆனால், எந்த மொழியில் படிப்பது என்கிற பயிற்றுமொழி பிரச்னையே பிரதானமாக இருக்கிறது. உலகத்தில் எந்த நாட்டிலும் தொடக்கக் கல்வியை வேறு மொழியில் படிப்பது கிடையாது. தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழில் படிப்பது கேவலமாகப் பார்க்கப்படுகிறது. தாய்மொழியில் புரிந்து படிப்பதுதான் சிறந்த கல்வி.

அரசுப்பள்ளியில்கூட தொடக்க வகுப்பில் ஆங்கில மீடியம் கொண்டுவந்துவிட்டார்கள். இங்கு மத்தியத்தர வர்க்கத்தினரின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படித்தால் அவர்கள் சொல்லிக்கொடுக்க முடியும். ஆனால், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள் ஆங்கில வழியில் படித்தால், அவர்கள் கல்வியில் மண்ணை வாரிப் போடுவதற்குச் சமம். அகரம் நிறுவனத்தில் இதுவரை 1961 மாணவர்கள் பயன்பெற்றிருக்கின்றனர். 

அனைவரும் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்கள். அவர்கள் கல்லூரியைத் திறம்பட முடித்து வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் எடுத்த முடிவில் மிக முக்கியமானது, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கொண்டுவந்ததும், பாடப்புத்தகத்தில் பின்பகுதியில் உள்ள கேள்விகளை மட்டுமே கேட்டுவந்தது மாற்றியது வரலாற்றுச் சாதனை. 120 கோடி பேருக்கு ஒரே மாதிரியான தேர்வு நடத்துவது சரியானதல்ல என்றாலும் இனி புதிய பாடத்திட்டத்தால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு கண்டு கவலைப்பட மாட்டார்கள்" என்றார்.உதயசந்திரன்ஓய்வுபெற்ற பேராசிரியரும் கல்வியாளருமான மாடசாமி, ``கடந்த ஆண்டு நடிகர் சூர்யா, இன்னோர் அனிதா உருவாகக் கூடாது என எழுதி எங்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் ஏன் போகக் கூடாது என்பதற்கு வரலாறு இருக்கிறது. 

ராஜஸ்தானில் கல்வி அமைச்சர் இருக்கும் வாசுதேவா, பதவி ஏற்றவுடனேயே நேரு குறித்த பாடங்கள் அனைத்தையும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டார். காந்தியடிகள் குறித்து ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் நீக்காமல் வைத்துள்ளார். முஸ்லிம் வரலாறு எங்கள் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று, `அக்பர் தி கிரேட்' என்ற பாடத்தை நீக்கிவிட்டார். 

கடந்த ஆண்டு கிறிஸ்தவர்கள் குறித்த பாடமும் எங்களுக்கு வேண்டாம் என்று பிதாகரஸ், நியூட்டன் குறித்த பாடத்தையும் நீக்கிவிட்டார். அந்த அளவுக்கு, முன்மாதிரியான மாநிலத்துக்கு நம்முடைய பிள்ளைகள் நீட் தேர்வு எழுதப்போகிறார்களோ என்று எதிர்ப்பு தெரிவித்தோம். 

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு துறை அறிஞர்களுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள் எளிமையாகவும் மாணவர்களின் அறிவை உயர்த்தும் வகையிலும் இருக்கும் என்றும் உறுதியளித்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறார் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்" என்றார். 

நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது... ``காரில் பள்ளிக்குச் செல்பவர்களுக்கு மத்தியில் கூரையே இல்லாமல் தாத்தா, பாட்டி, தங்கை என அனைவரையும் கவனித்துவிட்டு பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் நிறைய பேர் உள்ளனர். 

பள்ளியில் யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்களுக்கு இலவசக் கல்வி வழங்காமல் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு, அகரம் ஃபவுண்டேஷன் `விதை' என்ற திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்களில் இணைந்து இலவசக் கல்வியைப் பெற வழிகாட்டி வருகிறோம்.

2010-ம் ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு உதவி வருகிறோம். இந்த ஆண்டு மட்டும் 35 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து 450 மாணவர்கள் இலவசக் கல்வியைப் பெறுகின்றனர். 

பல்வேறு தடைகளைத் தாண்டி மாணவர்களை அடையாளம் கண்டு படிக்கவைக்கத் தயாராகிவருகிறோம். இந்திய அளவில் தமிழ்நாடு உயர்கல்வி முன்னிலையில் இருந்தாலும் இன்னும் சாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்விக்கு மட்டும் 27,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு நல்ல விஷயங்கள் நடந்துவருகின்றன. இதில் இன்னும் பல சிறப்பான விஷயத்தையும் செய்ய சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார் உதயச்சந்திரன்" என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive