பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்துறைச் செயலாளர் அளித்த ஒப்புதலையடுத்து, பகுதி நேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், முற்றுகைப் போராட்டத்தைத் திரும்பப்பெற்றனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 200 மாற்றுத் திறனாளியினர் பகுதி நேர ஆசிரியர்களாக தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றிவருகின்றனர்.அவர்கள், 6,7,8-ம் வகுப்புகளுக்கு ஓவியம், கணி, இசை, தையல் உள்ளிட்ட பாடங்களைப் பயிற்றுவித்து வருகின்றனர். அவர்கள், அனைவரும் 2012-ம் வருடம் முதல் பணியாற்றிவருகின்றனர்.அவர்கள், கடந்த இரண்டு தினங்களாக, கால முறை ஊதியம் வழங்கவேண்டும், பணி நிரந்தரம் செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து தெரிவித்த கலை பாடங்களுக்கான அரசுப் பள்ளி பகுதி நேர மாற்றுத்திறன் ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார், 'தமிழக மாற்றுத்திறனாளிகள் துறை, 2008-ம் ஆண்டு பிறப்பித்தஅரசாணையில், 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் சுமார் 200 மாற்றுத் திறனாளிகள் தொகுப்பூதியத் திட்டத்தின் கீழ் ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறோம். எங்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் வழங்கவேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், நேற்று மாலையில் தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி துறை செயலர் பிரதீப் யாதவ், மாற்றுத்திறனாளி ஆணையர் அருண் ராய், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர், சுடலைக்கண்ணன், ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தையில் நிதித்துறையின் ஒப்புதலைப் பெற்று விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற உறுதி மொழியை ஏற்று போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...