அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம்
வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும்
இலக்கியத்துறைகளில் சிறந்து விளங்கினால், அரசு செலவில் வெளிநாட்டுச்
சுற்றுலா செல்லலாம். ஒவ்வோர் ஆண்டும் 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து
வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்லத் தயாராகி வருகிறது, தமிழக அரசு.
இதற்காக மாணவர்களைத் தேர்வுசெய்யும் பணியைத் தொடங்கியுள்ளது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை. தேர்வுசெய்யப்படும் மாணவர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வி `பாஸ்போர்ட் இருக்கிறதா?’ என்பதுதான். பள்ளி மாணவர்களுக்கு பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல முடியும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஜப்பான், சீனா, தென்கொரியா, அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கும், கலைப் பிரிவில் தேர்வாகும் மாணவர்கள் சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, கிரீஸ், எகிப்து, ஃபிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளுக்கும், இலக்கியக் குழுவில் தேர்வாகும் மாணவர்கள் ரஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், நார்வே, சுவீடன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல வாய்ப்புள்ளது.
``பள்ளி மாணவர்கள் பாஸ்போர்ட் பெற, என்ன செய்ய வேண்டும்?’’ என்ற கேள்வியோடு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அசோக் பாபு I.F.S-ஐச் சந்தித்தோம்.
``தற்போது பொதுமக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறும்வகையில் விதிகளை எளிமையாக்கியுள்ளோம். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் பாஸ்போர்ட் பெறுவது எளிது. பெற்றோர்கள் பாஸ்போர்ட் வைத்திருந்தால் காவல்துறை விசாரணை இல்லாமல் விண்ணப்பித்து ஒரு வாரக் காலத்துக்குள் பாஸ்போர்ட் கிடைத்துவிடும். பெற்றோர்களிடம் பாஸ்போர்ட் இல்லையென்றால், காவல்துறை விசாரணைக்குப் பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆகலாம்.
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது, முகவரிக்கான சான்றிதழும் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழும் இருக்க வேண்டும். முகவரி விவரத்தைச் சரிபார்க்க ஆதார் கார்டே போதுமானது. ஆனால், பள்ளி மாணவர்கள் பலரும் ஆதார் கார்டு பெறாததால், பெற்றோர்கள் என்ன முகவரியில் இருக்கிறார்களோ அந்த முகவரிக்குத்தான் பாஸ்போர்ட் வழங்கப்படும். ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் என 12 வகையான விவரங்களில் ஏதேனும் ஒன்றைத் தாக்கல் செய்யலாம்.பிறப்புச் சான்றிதழில் பெயரைத் தவறுதலாகவோ ஸ்பெல்லிங் தவறுதலாகவோ இருந்தால், பள்ளி மாற்றுச்சான்றிதழ் அல்லது பள்ளியின் Bonafide Certificate போன்ற விவரங்களில் ஏதேனும் ஒன்றைத் தாக்கல் செய்யலாம்.
விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களாக இருந்தால், அவர்களுக்கு விடுதிக் காப்பாளரும், பள்ளியில் படிக்கிறார் என்பதற்கான பள்ளி அடையாள அட்டையையும், Bonafide Certificate-யையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். இவர்களுக்கு, தங்கியிருக்கும் விடுதியின் முகவரிக்கே பாஸ்போர்ட் அனுப்பிவைக்கப்படும்.
பாஸ்போர்ட் அலுவலகங்களுக்குச் செல்லும்போது ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு எடுத்துச் செல்லும்போது சான்றிதழின் நகலையும், அந்த நகலில் சான்றிதழ் உண்மைத்தன்மை கொண்டது என்ற சுய சான்றொப்பம் இட்டு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், சில மாவட்டங்களின் (கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருநெல்வேலி, விருதுநகர், நாகர்கோவில்) தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பாஸ்போர்ட் உதவி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இதைத்தவிர, புதுச்சேரியிலும் காரைக்காலிலும் பாஸ்போர்ட் உதவி மையங்கள் உள்ளன” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...