ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகளை,
மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: இதுவரை, முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றை நடத்தி, சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை, யு.பி.எஸ்.சி., வெளியிட்டுவந்தது. தற்போது, சிவில் சர்வீசஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், அகில இந்திய பணிகளுக்கு, இளைஞர் களை நியமிக்கும் முறையையும், அவர்கள் பணியாற்றும் மாநிலம் ஒதுக்கப்படுவதையும், ரத்து செய்ய உள்ளது.இதற்கு பதிலாக, '100 நாட்கள் பயிற்சியில் இருக்கும் போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், எந்தப் பணிக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில், அவருக்கு பணி ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும்' என, பிரதமர் அலுவலகம் விரும்புவதாக, மத்திய பணியாளர் சீர்திருத்தத் துறை இணை செயலர் விஜய்குமார்சிங் தெரிவித்துள்ளார்.
இது, அரசியல் சட்டம் அளித்துள்ள, சமூக நீதியை தட்டிப் பறிக்கும் செயல். 'பவுண்டேஷன் கோர்ஸ்' வழியே, பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களின், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., கனவுகளை தகர்க்கும்பிரதமர் அலுவலக உத்தரவை, திரும்பப் பெற வேண்டும்.தற்போது நடைமுறையில் உள்ள, சிவில் சர்வீசஸ் தேர்வு அடிப்படையிலேயே, அகில இந்திய பணிகளுக்கு, இளைஞர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். தவறினால், பா.ஜ., அரசை எதிர்த்து, தி.மு.க., மாபெரும் போராட்டத்தை நடத்தும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...