தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் கல்வித் திறனை
மேம்படுத்துவதற்காக ஆசிரியர்கள் மேற்கொள்ளும் புதிய கற்பித்தல் முயற்சிகளை
ஊக்குவிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1.3 கோடி மாணவர்கள் படித்து
வருகின்றனர். அவர்களுக்கு வகுப்பறையில் வழக்கமான கற்பித்தலுடன் வரைபடங்கள்,
கணினி, விடியோக்கள், கணிதப் பாட பாடல்கள், பெருக்கல் வாய்ப்பாடு
ஒப்புவிக்கும் போட்டி என, பல்வேறு வித்தியாசமான முறைகளில் ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சிகள் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப்
பெற்றுள்ளன. இதனால் அறிவியல், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில்
கூறப்பட்டுள்ள விஷயங்களைத் தாங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது என
மாணவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக
கிராமப்புறங்களில் வித்தியாசமான கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களை
ஊக்குவிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கணித
ஆசிரியை கேத்தரின் ரூபி தெரசா, கணித கற்பித்தல் குறித்து 100 -க்கும்
மேற்பட்ட விடியோக்களை உருவாக்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதேபோன்று, ஈரோடு மாவட்டம், நாதகவுண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளி ஆசிரியர் தே.தாமஸ் ஆண்டனி (பொம்மலாட்டம் மூலம் கல்வி கற்பித்தல்)
உள்பட தமிழகம் முழுவதும் 2,000 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புதுமையான
செயல்பாடுகள் மூலம் கற்பித்து வருகின்றனர்.
புதிய வலைதளம் உருவாக்கம்: இதுபோன்ற புதிய முயற்சிகளை ஒரே கூரையின்கீழ்
ஒருங்கிணைப்பதன் மூலம், புதுமையான கற்பித்தல் முறை தமிழகம் முழுவதும் உள்ள
ஆசிரியர்களைச் சென்றடையும்.
இதற்காக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் புதிய வலைதளம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் ஆசிரியர்களின் விடியோக்கள், புதுமையான கற்பித்தல் திட்டங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான தளமும் உருவாக்கப்படும்.
அதில் அதிகம் பேரின் கவனத்தைப் பெறும் ஆசிரியர்கள் உரிய முறையில்
கௌரவிக்கப்படுவர். வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புதிய
பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், இந்தத் திட்டம்
ஆசிரியர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றனர் அவர்கள்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுமா?
புதிய பாடத்திட்டம் குறித்து, ஜூன் முதல் வாரத்தில் அரசுப் பள்ளி
ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியின்போது
பாடநூல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம், கற்பித்தலில்
செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு
விளக்கமளிக்கப்படும்.
தற்போது தங்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என தனியார் பள்ளி
ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான
பயிற்சிகள் முழுவதுமாக முடிவடைந்ததும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு
கண்டிப்பாக புதிய பாடத் திட்டம் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும் என
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...