Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப்பள்ளிகள் அனைத்தும் வண்ணமயமாக வேண்டும்! அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஆத்மார்த்த பணி

விரிசல் விழுந்த கட்டடம்... தண்ணீர் ஒழுகும் ஓடுகள்... சிதிலமடைந்த மதில் சுவர்... மூக்கைப் பொத்திக்கொண்டுகூட நுழைய முடியாத கழிவறைகள், மழை பெய்து தண்ணீர் ஒழுகினால் பக்கத்து வகுப்பறைகளுக்குச் சென்று அமர்ந்தாக வேண்டிய நிலைமை...`இவைதான் அரசுப் பள்ளிகளின் அடையாளங்களாக விளங்கி வருகின்றன. விதிவிலக்காகச் சில இடங்களில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள்வரை செயல்பட்டு வந்தாலும், பெரும்பான்மையான அரசுப் பள்ளிகள் அடிப்படை வசதிகளுக்கே திண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த வெளிப்புறத் தோற்றம்தான் அரசுப் பள்ளிகளை அழுக்கானதாகவும், அங்கு படிக்கும் குழந்தைகளைப் பாவப்பட்டவர்களாகவும் நினைக்கவைக்கிறது. அதேவேளையில், படிப்புடன் சேர்த்து நீச்சல், ஸ்கேட்டிங், குதிரையேற்றம், கிரிக்கெட் போன்ற பயிற்சிகளை அள்ளித் தருகிறோம் எனச் சில ரூபாய்களில் விளம்பரம் செய்து, பல கோடிகளை அள்ளிக் குவிக்கின்றன தனியார் பள்ளிகள்.

இப்படி எத்தனை காலத்துக்குத்தான் பாழடைந்த கட்டடங்களாகவே அரசுப் பள்ளிகள் இருக்க வேண்டும்? பள்ளி வகுப்பறைகள் கலர்ஃபுல் ஆக மாறினால்தான், குழந்தைகளின் கற்றல் சூழல் கச்சிதமாய் இருக்கும் எனக் கிளம்பியிருக்கிறார்கள், `அரசுப் பள்ளிகளைக் காப்போம்' என்ற இயக்கத்தினர்.

அவர்கள், தமிழ்நாடு முழுவதும் பயணித்து, தங்களின் சொந்தச் செலவில் அரசுப் பள்ளிகளின் சுவர்களை வண்ண வண்ண ஓவியங்களால் அழகுப்படுத்தி வருகின்றனர். அவர்கள் முன்னெடுத்துள்ள இந்தச் செயலுக்கு, தமிழகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இயற்கைக் காட்சிகள், விடுதலை வீரர்கள், உலகின் சிறந்த ஆளுமைகள், கியூபிஸம், 3-டி ஓவியம் என அந்த இயக்கத்தினரின் கைவண்ணத்தில், ஒவ்வோர் அரசுப் பள்ளிகளும் அசத்தலான தோற்றத்தைக் கண்டுவருகிறது.

தற்போது திருப்பூர் பெரியார் காலனியில் இயங்கிவரும் ஓர் அரசுப் பள்ளிக்கூடத்தை அழகாக்கிக் கொண்டிருந்தவர்களிடம் பேசினோம். அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியரான ராஜசேகரன், ``நான் திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். `பள்ளிக் கட்டடங்களும், வகுப்பறைகளும் வெறும் சுண்ணாம்புச் சுவர்களாய் இருப்பதைவிட, ஓவியங்கள் நிறைந்த வண்ணச்சுவர்களாய் இருந்தால் அது மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுக்கு உதவியாய் இருக்கும்' என சக ஆசிரிய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் இந்த முயற்சிக்கான முதல் விதை போடப்பட்டது. அதன்பிறகு, எங்களுக்குத் தெரிந்த நன்றாக ஓவியம் வரையக்கூடிய ஆசிரியர்கள் சிலரை ஒருங்கிணைத்து ஒரு குழுவை உருவாக்கினோம். அந்தக் குழுவின் மூலம் முதன்முறையாக 2015-ம் ஆண்டு தேனியில் உள்ள ஒரு பள்ளிக்கு ஓவியம் வரைந்து கொடுத்தோம். அதற்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கவே, அதன்பிறகுதான் இந்தப் பணியைத் தமிழகம் முழுவதும் ஓர் இயக்கம்போலச் செயல்படுத்தலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. பின்னர், அதற்காக ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி மும்முரமாகப் பணியாற்றத் தொடங்கினோம். எங்களுடைய செயல்பாடுகளைப் பார்த்து மேலும் சில ஆசிரியர்கள் குழுவில் இணைந்தார்கள். விருப்பமிருந்தும் எங்களுடன் பயணிக்க முடியாத ஆசிரியர்கள் பெயின்ட், பிரஷ் எனத் தங்களால் முடிந்த பொருளுதவிகளைச் செய்தார்கள்.

ஆனால், ஆசிரியர் பணிக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாத வகையில், அரசு விடுமுறை நாள்கள், பள்ளித் தேர்வு விடுமுறை நாள்களில்தாம் இந்தப் பணிகளைச் செய்துவருகிறோம். ஒரு பள்ளிக்கு ஓவியம் வரையச் சென்றால், அங்கு பணிகள் முடியும்வரை அந்தப் பள்ளியிலேயே தங்கிக்கொள்வோம். தற்போது எங்கள் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் என மொத்தம் 70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

தற்போதுவரை திருப்பூர், கோவை, தேனி, திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஓவியம் வரைந்து கொடுத்திருக்கிறோம். இன்னும் 17 அரசுப் பள்ளிகளில் ஓவியம் வரைய அழைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த அனைத்துப் பள்ளிகளையும் வண்ணமயமாக்கிவிட வேண்டும் என்பதே எங்கள் திட்டம்'' என்றார், மகிழ்ச்சியுடன்.




3 Comments:

  1. Plz send contact number .

    ReplyDelete
  2. I need their advice for the improvement of my school.

    ReplyDelete
  3. I need their advice for the improvement of my school.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive