Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மூடநம்பிக்கையை விரட்டிய அரசுப்பள்ளி மாணவி.. அமெரிக்கா செல்கிறார்!


திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே இருக்கும் காலாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறார் பானுப்பிரியா. இவர், அமெரிக்க நிறுவனம் ஒன்று அகில இந்திய அளவில் நடத்திய கல்வி மற்றும் சமுதாயச் செயல்திட்டம் பற்றிய விழிப்புஉணர்வுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளா. ``பெண் குழந்தையாக பிறந்தவங்க 12, 13 வயசுல பெரிய மனிஷி ஆகறது இயல்பு.ஆனால், நம்மிடம் இருக்கும் சில மூடநம்பிக்கையால் சடங்கு என்கிற பெயரில் சில விஷயங்களைச் செய்றாங்க. அது, எங்களை மனசால் எந்த அளவுக்குப் பாதிக்குதுனு உணர மாட்டேங்கிறாங்க. அதை, எங்க ஊரைச் சேர்ந்த பெரியவங்களுக்கு ஓரளவுக்கு உணரவெச்சிருக்கேன். பரிசைவிட அதுதான் எனக்குப் பெரிய மகிழ்ச்சி. மாணவிகளுக்கு மாதவிடாயை நினைச்சு பயமோ, பதற்றமோ தேவையில்லை’’ என்கிறார் பானுப்பிரியா.‘`ஸ்கூல், படிப்பு, தோழிகளோடு அரட்டை என ஜாலியா இருந்தேன். திடீர்னு ஒருநாள் நான் பெரிய மனுஷி ஆகிட்டேன்னு சொல்லி, துணியால் மறைப்பு கட்டி 16 நாள்களுக்குத் தனியா தங்கவெச்சுட்டாங்க. அந்த நாள்களில் என் தோழிகளைப் பிரிஞ்சு இருந்தது ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அப்புறம், மஞ்சள் நீராட்டு விழானு சொல்லி, சொந்தக்காரங்க எல்லாம் சீர்வரிசை களோடு  வந்து புது டிரெஸ் எல்லாம் கொடுத்தாங்க. சந்தோஷமா இருந்துச்சு. அந்த சந்தோஷம் நீடிக்கலை. மறுமாதமே மாதவிடாய் வந்ததும், தனியாகப் படுக்கவெச்சு விலக்கமாறு, உலக்கை எல்லாம் காவலுக்கு வெச்சுட்டாங்க. தனி டம்ளர், தட்டு கொடுத்து, ‘இனிமே நீ ரொம்பக் கட்டுப்பாடா இருக்கணும்’னு சொல்லிட்டாங்க. அம்மாவோடு சேர்ந்தே தூங்கிய எனக்கு, மனசுல பெரிய பாதிப்பை ஏற்படுத்திச்சு. பெண்களுக்கு இயற்கையாக நடைபெறும் நிகழ்வை ஏன் கொச்சைப் படுத்துறாங்கன்னு நினைச்சேன். இந்த நேரத்துலதான், மாணவர்கள் பங்கேற்கும் அகில இந்திய விழிப்புஉணர்வு செயல்திட்டம் போட்டி பற்றி ஆசிரியர் சொன்னார். ‘மாதவிடாய் ஒரு மூடநம்பிக்கை’ என்ற தலைப்பில் அதைக் கையில் எடுத்தேன்.
அந்த நேரத்தில், எனக்கு உடம்பு முடியாமல்போய் ராயபுரம் மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போனாங்க. அங்கிருந்த பெண் மருத்துவரிடம், என் பிரச்னை மற்றும் கிராமத்தில் மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கை பற்றிச் சொன்னேன். அங்குள்ள மருத்துவர்கள் எங்க ஊருக்கு வந்து, மாதவிடாய் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தினாங்க. எங்க ஊர்ல எல்லா மதத்தினரும் இருக்காங்க. அதனால், அனைத்து மத தெய்வங்களின் வேஷம் போட்டு, மாதவிடாய் பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படுத்தினேன். மாதவிடாயின்போது சுகாதாரமற்ற துணியைப் பயன்படுத்தினால், தொற்றுநோய் வரும் என்பதையும் நாப்கின் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குறும்படமாக எடுத்துத் தெளிவுபடுத்தினோம். இதுபோல, மாதவிடாய் பற்றிய பிரச்னைகளைக் கல்வி மற்றும் செயல்திட்டமாக எடுத்து,  போட்டிக்கு அனுப்பினேன். இந்திய அளவில் தனிப் பிரிவில் தங்கப்பதக்கம் ஜெயிச்சேன்’’ என்கிறார் பானுப்பிரியா. 

அந்தப் போட்டியில் குழுவினர் பிரிவில், அதே பள்ளியைச் சேர்ந்த புஷ்பலதா, வித்யா, தேவிகா, சரோஜினி மற்றும் ஹரிஹரன் குழுவினர், அகில இந்திய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.

இவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் ஆனந்த், ‘`இது, பள்ளி மாணவர்களிடம் சமுதாயம்குறித்த அறிவையும் அவர்களால் சமுதாயத்தில் ஏற்படும் மாற்றத்தையும் அடிப்படையாகக்கொண்ட போட்டி. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் இந்தப் போட்டி நடக்கும். இதில்தான் எங்கள் பள்ளி பரிசு வென்றுள்ளது. இந்திய அளவில் 4600 பேர் விண்ணப்பித்த இந்தப் போட்டியில், 16 பள்ளிகள் தேர்வாகின. டெல்லியில் நடந்த இறுதிச் சுற்றில் பானுப்பிரியா தனிப்பிரிவில் தங்கமும் 50,000 ரூபாய் ரொக்கமும் வென்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவுக்குச் செல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். ஒரு சிறிய கிராமத்தின் பள்ளியிலிருந்து இந்திய அளவில் சாதனைப் படைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்




1 Comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive