கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கிடையாது எனக் கால்நடை
பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்குத் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ‘நீட்’ ஆகும். மருத்துவம் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. சித்த, ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கிடையாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று (மே 21) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், “இந்தியாவிலே தமிழகம்தான் கால்நடைப் பராமரிப்புத் துறையில் முதன்மை இடத்தில் இருக்கிறது. கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு வருவதற்கு வாய்ப்பே இல்லை. கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படாது” என்றார்.
ஆன்லைனில் விண்ணப்பம்
கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கிடையாது என்றும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் பாலசந்திரன், “தமிழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு மற்றும் பால்வள தொழில்நுட்பப் பட்டப்படிப்பு என மொத்தம் 460 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளில் சேர நேற்று தொடங்கி ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
முதன்முறையாக ஆன்லைனில் மூலம் கால்நடை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் சமர்ப்பித்து கட்டணம் செலுத்திய பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தகுந்த சான்றிதழ் நகல்களை சேர்க்கைக்குழு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஜூலை முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மூன்றாம் வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும்” என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...